Wednesday, October 21, 2015

பொதுமக்களின் படுகொலைக்கு புலிகளே பெருமளவில் பொறுப்பு: பரணகம ஆணைக்குழு அறிக்கை!

Wednesday, October 21, 2015
இறுதிக்கட்டப் போரின் கடைசிக் கட்டத்தில்  புலிகளே பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களைக் கொன்றொழித்ததாக மக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 
இறுதிக்கட்டப் போரின் போர்க்குற்றங்கள் தொடரில் முன்னைய அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டிருந்த மெக்ஸ்வெல் பரணகம மற்றும் உதலாகம ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.
 
இந்நிலையில் குறித்த ஆணைக்குழுக்களின் அறிக்கைகளின் உள்ளடக்கம் குறித்து திவயின பத்திரிகை செய்தியொன்றை வெளியிட்டுள்ளது.
 
குறித்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இறுதிக்கட்டப் போரின் போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உள்நாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று உதலாகம ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.
 
மக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரகாரம் இறுதிக்கட்டப் போரில் பொதுமக்களை மனிதக் கேடயங்களாக விடுதலைப் புலிகள் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சிறுவர்களுக்கு ஆயுதங்களை வழங்கி போரின் முன்னரங்குகளுக்கு அனுப்பி வைத்தமை, மனிதக் கேடங்களாக பொதுமக்களை பயன்படுத்தியமை, புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிலிருந்து தப்பிவர முயன்ற பொதுமக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியமை போன்ற செயல்களின் காரணமாக பொதுமக்களின் உயிரிழப்புகளுக்கு புலிகள் பெருமளவில் காரணமாக இருந்துள்ளார்கள்.
 
இறுதிக்கட்டப் போரின் கடைசி நேரத்தில் விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் காரணமாக பொதுமக்கள் அதிகளவில் உயிரிழக்க நேர்ந்துள்ளது.
 
எனினும் தாருஸ்மான் அறிக்கையில் குறிப்பிட்டிருப்பது போன்று பாரியளவில் உயிர்ச்சேதங்கள் ஏற்படவில்லை என்றும், தாருஸ்மான் அறிக்கை சர்வதேச மட்டத்தில் இலங்கையை அபகீர்த்திக்குள்ளாக்கும் வகையில் அமைந்திருப்பதாகவும் மக்ஸ்வெல் பரணகம அறிக்கை குற்றம் சாட்டியுள்ளதாகவும் திவயின செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment