Sunday, September 6, 2015

நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு வழங்கப்பட்டமை தவறானது : தயான் ஜயதிலக!

Sunday, September 06, 2015
நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு வழங்கப்பட்டமை தவறானது என்று தயான் ஜயதிலக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக இவ்வார ஞாயிறு ரிவிர சிங்களப் பத்திரிகைக்கு அவர் கட்டுரையொன்றை எழுதியுள்ளார்.
அக்கட்டுரையில் தயான் ஜயதிலக்க தொடர்ந்தும் கீழ்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

1977ம் ஆண்டு சுதந்திரக் கட்சியை விட கூடுதல் நாடாளுமன்ற உறுப்பினர்களை தமிழர் விடுதலைக் கூட்டணி பெற்றிருந்த காரணத்தினாலேயே அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராக முடிந்தது. எனினும் அதன் மூலம் நாட்டுக்கு தீங்குதான் விளைந்தது.

ஆனால் தற்போது சுதந்திரக் கட்சிக்கு 95 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். பொதுமக்களின் எதிர்பார்ப்பு அவர்கள் பலம்வாய்ந்த எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும் என்பதுதான். அதனைமீறி தேசிய அரசாங்கத்தில் இணைந்து அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொண்டது வாக்களித்த மக்களுக்கு செய்த முதலாவது துரோகமாகும்.

அதன் பின்னர் கூட தேசிய அரசாங்கத்திற்கு எதிரான ஐம்பதுக்கும் அதிகமான சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அந்த வகையில் பார்த்தாலும் கூட எதிர்க்கட்சித் தலைவர் பதவி சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கே வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்க முடியாது என்ற வாதமும் இங்கு செல்லுபடியற்றது. ஏனெனில் கடந்த ஜனவரியில் நடைபெற்ற ஆட்சிமாற்றத்தின் பின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நல்லாட்சி அரசாங்கத்தின் பங்காளியாக மாறியுள்ளது.

அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனியான நிர்வாக அலகு அல்லது சமஷ்டியை வலியுறுத்தி வரும் ஒரு கட்சியாகும். அந்த வகையில் நாட்டின் அரசியல் அமைப்பை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
அப்படிப்பட்ட ஒரு கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்குவது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி விடும். அத்துடன் நாட்டின் இறையாண்மைக்கும் ஆபத்தை ஏற்படுத்தி விடும் என்றும் தயான் ஜயதிலக தொடர்ந்தும் விமர்சித்துள்ளார்.

No comments:

Post a Comment