Tuesday, September 15, 2015

அகதிகளாக வரும் மக்கள் அதிகரிப்பு: எல்லைப்பகுதியை இழுத்து மூடியது ஹங்கேரி அரசு – கண்ணீருடன் காத்திருக்கும் குடியேறிகள்!

Tuesday, September 15, 2015
தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான குடியேறிகள் ஹங்கேரிக்குள் நுழைவதை தடுக்கும் வகையில் செர்பியா நாட்டையொட்டியுள்ள எல்லைப்பகுதியை ஹங்கேரி அரசு மூடியுள்ளது.
இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் மட்டும் உள்நாட்டு கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து பிறநாடுகளுக்கு அடைக்கலம் தேடி செல்லும் சுமார் 2 லட்சம் மக்கள் ஹங்கேரிக்குள் நுழைந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் ஹங்கேரியில் அகதிகளாக தங்கியுள்ளனர். மீதிபேர் இங்கிருந்து கடல்மார்க்கமாக துருக்கி, கிரீஸ், ஜெர்மனி மற்றும் ஸ்வீடன் போன்ற நாடுகளுக்கு புகலிடம் தேடி செல்கின்றனர்.
 
ஐரோப்பிய யூனியன் நாடுகளில் ஒன்றான ஹங்கேரிக்குள் நுழைந்து விட்டால் போதும். அங்கிருந்து ஏதாவது ஒரு ஐரோப்பிய நாட்டில் எப்படியாவது குடியேறி விடலாம் என்ற ஆவலுடன் இங்குவரும் மக்களால் ஹங்கேரியில் வாழும் மக்களின் அமைதி சீர்குலைந்து விடும் என ஹங்கேரி அரசு கருதுகின்றது.
 
அதுமட்டுமின்றி, வந்தேறிகளில் பெரும்பாலானவர்கள் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வந்துகொண்டிருப்பதால், ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் உண்டாகலாம் எனவும் அஞ்சப்படுகிறது.
 
குறிப்பாக, இந்த ஆண்டுக்குள் ஜெர்மனியில் மட்டும் 10 லட்சம் பேர் அகதிகளாக நுழையக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஹங்கேரியின் குடியுரிமை சட்டத்தில் நாளை கடுமையான சட்டதிட்டங்கள் சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை இல்லாத அளவிற்கு அண்டை நாடான செர்பியாவில் இருந்து நேற்று மட்டும் 5 ஆயிரத்து 809 குடியேறிகள் ஹங்கேரியை வந்தடைந்தனர்.
 
நிலைமை மேலும் மோசமாவதை தடுக்கும் வகையில் செர்பியா – ஹங்கேரி எல்லையோரம் உள்ள 13 அடி உயர வேலியை இழுத்துமூடி, இனியும் குடியேறிகள் ஹங்கேரிக்குள் நுழைவதை தடுக்குமாறு ஹங்கேரி அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, ரோஸ்கே எல்லைப்பகுதி உடனடியாக அடைக்கப்பட்டது.
 
வழக்கம்போல் ஹங்கேரிக்குள் நுழையும் ஆவலுடன் எல்லைப்பகுதிக்கு இன்று வந்த குடியேறிகள் எல்லைப்பகுதி அடைக்கப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தோளிலும், இடுப்பிலும், தள்ளுவண்டிகளிலும் குழந்தைகளை வைத்தபடி காத்திருக்கும் பல பெண்களும், முதியோர்களும் எல்லையோரம் அழுதபடி காத்திருக்கும் காட்சி பார்ப்பவர்களின் இதயத்தை வேதனையில் ஆழ்த்துவதாக உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
 
எல்லைப்பகுதி அருகே ஏராளமான ராணுவ ஹெலிகாப்டர்களும், போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முன்னதாக, கள்ளத்தனமாக ஹங்கேரிக்குள் நுழையும் குடியேறிகள் கைது செய்யப்படுவார்கள் என அந்நாட்டு அரசு நேற்று அறிவித்திருந்தது, குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment