Sunday, September 27, 2015

ஆப்பிள் சி.இ.ஓ., டிம் குக் - மோடி சந்திப்பு!

Sunday, September 27, 2015
சான்ஜோஸ் : கலிபோர்னியாவில் நுாற்றுக்கணக்கான தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமையகம் செயல்படும் சிலிக்கான் பள்ளத்தாக்குக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, ஆப்பிள் நிறுவனத்தின் சி.இ.ஓ., டிம் குக்கை சந்தித்து பேசினார்.
 
ஆப்பிள் நிறுவனத்திற்கும், இந்தியாவிற்கும் நல்ல நட்புறவு நீடித்து வருவதாக ஆப்பிள் நிறுவனத்தின் சி.இ.ஓ. டிம் குக் கூறியுள்ளார்.
 
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்குழு கூட்டம், ஜி4 நாடுகளின் கூட்டம், ஆப்பிள், பேஸ்புக் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் உயரதிகாரிகளின் சந்திப்பு உள்ளிட்ட பணிகளுக்காக, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
 
ஐ.நா. சபையின் கூட்டத்தில் சிறப்புரையாற்றிய மோடி, பின் ஜி4 நாடுகளின் மாநாட்டிலும் சிறப்புரையாற்றினார். பின் கூகுள், ஆப்பிள், டெஸ்லா நிறுவனங்களின் உயரதிகாரிகளை, பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார்.
 
சான் ஜோஸ் நகரில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தின் தலைமையகத்தில், அந்நிறுவன சி.இ.ஓ. டிம் குக்கை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார்.
 
இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக, சந்திப்பிற்கு பிறகு டிம் குக் கூறியுள்ளார்.
 
இந்த சந்திப்பிற்கு முன்னதாக, டிம் குக் கூறியதாக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கூறியதாவது, 
 
 ஆப்பிள் நிறுவனத்திற்கும், இந்தியாவிற்கும் நீண்டநாள் நட்பு உள்ளது. எங்களது நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸிற்கு, இத்துறையில் சிறந்துவிளங்க ஊக்கமளித்ததே இந்தியா தான். ஸ்டீவ் ஜாப்ஸ், பலமுறை இந்தியாவிற்கு பயணம் செய்துள்ளார். டிஜிட்டல் இந்தியா தி்ட்டம், இந்தியாவை பல்வேறு துறைகளில் முன்னெடுத்து செல்லும் தி்ட்டமாக உள்ளதாக டிம் குக் கூறியதாக, ஸ்வரூப் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment