Saturday, September 26, 2015

நுவரெலியா வெதமுல்ல மண்சரிவில் ஏழு பேர் பலி!

Saturday, September 26, 2015
நுவரெலியா மாவட்டத்தில் உள்ள கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட உட்பட்ட  கொத்மலை, ரம்பொடை வெதமுல்ல பிரிவு லிலிஸ்லேண்ட் (கயிறுகட்டி) தோட்டத்தில் இடம்பெற்ற பாரிய மண்சரிவில் ஏழு பேர் பலியாகியுள்ளதாகவும் அவர்களது சடலங்கள் கொத்மலை வைத்தியசாலையின் பிரேத அறையிலிருந்து மரண பரிசோதனைக்காக நாவலப்பிட்டி சட்ட மருத்துவ அதிகாரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
 
மீட்பு பணியாளர்களால் 25.09.2015 அன்று இரவு வரை 6 சடலங்கள் மீட்கப்பட்டிருந்த நிலையில் 26.09.2015 அன்று சனிக்கிழமை காலை 2 வயதுடைய சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்.

இதற்கமைய உயிரிழந்தவர்களின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த லோகநாயகி (48 வயது), காந்திமதி (23 வயது), புவனா (6 வயது), லட்சுமி (67 வயது), சுபானி (9 வயது), மனோஜ் (4 வயது), ரூபினி (2 வயது) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

மேலும் இருகால்களும் உடைந்த நிலையில் செல்லையா கணேசன் (வயது 55) என்பவர் மீட்கப்பட்டு ஆபத்தான நிலையில் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் இவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரியவருகிறது.

இவ் அனர்த்தத்தில் 9 குடும்பங்களைச் சேர்ந்த 30 பாதிக்கப்பட்டுள்ளனர்.

25.09.2015 அன்று பிற்பகல் 2.45 மணியளவில் இடம்பெற்ற இந்த பாரிய மண்சரிவில் 9 வீடுகளை கொண்ட லயனும் (தோட்டக்குடியிருப்பு) சேதமடைந்துள்ளன.
அவர்களுக்கான நிவாரண உதவிகளை நுவரெலியா மற்றும் கொத்மலை பிரதேச சபைகள் முன்னெடுத்து வருகின்றன.

அத்தோடு, மண்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு அண்மித்த பகுதியில் உள்ள பாரிய மண்மேடு சரிந்துவிழும் ஆபத்து காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மீட்பு பணிகளின் போது பூண்டுலோயா மற்றும் கொத்மலை பொலிஸார், இராணுவத்தினர் உட்பட பொது மக்கள் ஆகியோர் ஈடுப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது

No comments:

Post a Comment