Friday, September 4, 2015

எதிர்க்கட்சி தலைவர் நியமனத்தில் ஆத்திரமுற்ற விமல்: பிரதமருடன் சபையில் வாக்குவாதம்!:- சம்பந்தனின் நியமனத்தால் நாட்டுக்கு பேராபத்து; விமல் வீரவன்ச சீற்றம்

Friday, September 04, 2015
நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் பெயர் அறிவிக்கப்பட்டதை அடுத்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் விமல் வீரவன்சவிற்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் பெரும் சொற்போர் இடம்பெற்றுள்ளது.

நாடாளுமன்றம் நேற்று முற்பகல் 9.30 அளவில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியபோது எதிர்க்கட்சித் தலைவராக இரா. சம்பந்தன் நியமிக்கப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் எவரது பெயரும் இப்பதவிக்கு முன்மொழியப்படாததினால் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக சம்பந்தனை நியமித்ததாக சபாநாயகர் அறிவித்தார்.

இதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கடும் எதிர்ப்பை சபையில் வெளியிட்டார்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இரா. சம்பந்தனுக்கு வழங்க வேண்டாம் என்று தெரிவித்த அவர், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவை அப்பதவிக்கு நியமிக்குமாறு கோரி 55 உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதமொன்றை ஜனாதிபதியிடம் கையளித்திருந்ததாகவும் சுட்டிக்காட்டினார்.

இதன்போது குறுக்கிட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பொலனறுவையில் நேற்று முன் தினம் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவாண்டு நிகழ்வில் ஜனாதிபதியுடன் சென்றிருந்த சந்தர்ப்பத்தில் இது குறித்து கேட்டிருக்கலாம் என தெரிவித்தார்.

குறித்த கடிதம் சபாநாயகருக்கு அன்றி கட்சியின் தலைவருக்கே கையளிக்கப்பட்டிருப்பதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

பிரதமர் இவ்வாறு தெரிவிக்கையில் அதனை உறுதிப்படுத்திய சபாநாயகர் கரு ஜயசூரிய, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 55 உறுப்பினர்கள் கையெழுத்திட்டிருந்ததாக கூறப்படுகின்ற கடிதம் இதுவரை தன்னிடம் கையளிக்கவில்லை என்று தெளிவுபடுத்தினார்.
 
ஜெனீவா அறிக்கை வெளிவரவுள்ள நிலையில் சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக்கப்பட்டுள்ளமையால் நாட்டுக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது என எச்சரித்து தேசிய சுதந்திர முன்னணி தலைவரும் ஐ.ம.சு.மு. பங்காளியுமான விமல் வீரவன்ச, வெளிநாட்டுத்தூதரகங்கள் தமது உளவாளிகளாக பலரை சபைக்குள் அனுப்பியுள்ளதாகவும் நேற்று குற்றம் சாட்டினார்.

No comments:

Post a Comment