Monday, September 14, 2015

அரசியல் தீர்வு புதிய அரசாங்கத்தின் மூலம் சாத்தியப்படும்: வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர!

ஐ.நாவில் மங்கள உரை!
Monday, September 14, 2015
இலங்கையில் அரசியல் தீர்வு உட்பட முற்போக்கான சீர்த்திருத்தங்கள் இலங்கையின் புதிய அரசாங்கத்தின் மூலம் சாத்தியப்படும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். தமிழர்களுக்கான அரசியல் தீர்வு புதிய அரசியல் யாப்புத் திருத்தத்தின் மூலம் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். மேலும் குற்றங்களுக்கு தண்டனை அளிக்கவென உள்நாட்டு குற்றவியல் நீதிமன்றம் அமைக்கப்படும் என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் மங்கள சமரவீர தெரிவித்தார். ஆகையால் கடந்த கால ஏமாற்றங்களை புறந்தள்ளி நம்பிக்கையுடன் புதிய இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுமாறு வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சர்வதேச நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார்.
 
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத்தில் இன்று உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்தார். கடந்த பாராளுமன்றத் தேர்தலை வெற்றிகொள்ள நல்லாட்சிகான ஐக்கிய தேசிய முன்னணிக்கு வாய்ப்பு கிட்டியதாகவும் அதன் பின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்துள்ளதாகவும் அதன்மூலம் ஐதேக, ஐமசுமு இணைந்து புதிய அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அரசியல் மற்றும் கொள்கையை வலுப்படுத்த அது உந்துதலாக அமையும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார். நல்லாட்சியை உறுதி செய்யும் வகையில் இலங்கை பாராளுமன்றின் எதிர்கட்சித் தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு வழங்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். எதிர்கட்சித் தலைவர் தெரிவு, 44வது பிரதம நீதியரசர் தெரிவு உள்ளிட்ட விடயங்களை வைத்து பார்க்கும்போது புதிய இலங்கையில் இனம், மதம், வர்க்கம், பாலினம் போன்றவற்றின் அடிப்படையில் எவருக்கும் உரிய இடம் மறுக்கப்படுவதில்லை என்று தெளிவாவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
2009 யுத்த முடிவுக்குப் பின் குறுகிய கால கொள்கைகளின் விளைவாக வெற்றிகரமான அணுகுமுறைகள் எதனையும் கடைபிடிக்கவில்லை என்றும் ஆனால் புதிய நல்லாட்சி அரசாங்கம் நல்லிணக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து செயற்படுவதாகவும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டார். நல்லிணக்கம் ஏற்பட காலம் செல்லும், பதற்றமாக இருக்கும் அதனை நாம் விளங்கிக் கொண்டுள்ளோம். ஆனால் இத்திட்டம் கவனமாக முன்னெடுக்கப்பட வேண்டும். எமது நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இதுவரை பல முறை தடுமாறியுள்ளது. மீண்டும் ஒரு முறை நாம் தோல்வியடைய முடியாது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் உண்மை ஆணைக்குழு ஒன்றை அமைக்கவுள்ளதாகவும் காணாமற்போனோர் குறித்த பணியகம் ஒன்றை திறக்கவுள்ளதாகவும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் மங்கள சமரவீர வாக்குறுதி அளித்துள்ளார்.

No comments:

Post a Comment