Sunday, September 13, 2015

எதிர்க்கட்சியில் அமரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எம்.பிக்கள், தொகுதி அமைப்பாளர் பதவியை இழக்க நேரிடும் : மஹிந்த ராஜபக்ச அணியினருக்கு எச்சரிக்கை!

 Sunday, September 13, 2015
எதிர்க்கட்சியில் அமரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எம்.பிக்கள், தொகுதி அமைப்பாளர் பதவியை இழக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கட்சி உயர்மட்டம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக நம்பகமான வட்டாரங்களின் ஊடாக தகவல் கிடைத்துள்ளது என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது அமைப்பாளர் பதவியை இழக்க நேரிடும் என தெரிவிக்கப்படுகிறது.
 
தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்காது எதிர்க்கட்சியில் அமரும் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் பட்டியலில், மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளடங்குகின்றனர். ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 201 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசிய அசராங்கத்தின் உறுப்பினர்களாக கருதப்படுவர் என அண்மையில் அவைத் தலைவர், கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அறிவித்திருந்தார்.
 
இதன்படி மஹிந்த ராஜபக்ச, தினேஸ் குணவர்தன, வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச ஆகியோருக்கு நாடாளுமன்றில் பின்வரிசை ஆசனங்களை வழங்க சபாநாயகர் தீர்மானித்துள்ளார். நாடாளுமன்றின் எதிர்க்கட்சி உறுப்பினர்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி உறுப்பினர்கள் காணப்படுகின்றனர். எனவே அவர்களுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கான ஆசன ஒதுக்கீட்டில் முன்னுரிமை அளிக்கப்பட உள்ளதாக சிங்கள ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment