Thursday, September 3, 2015

இலங்கையின் 8வது பாராளுமன்றின் எதிர்கட்சித் தலைவர் யார் என்ற கேள்விக்கு இன்று விடை கிடைக்கும்!

Thursday, September 03, 2015
இலங்கையின் 8வது பாராளுமன்றின் எதிர்கட்சித் தலைவர் யார் என்ற கேள்விக்கு இன்று விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று காலை பாராளுமன்றம் கூடவுள்ள நிலையில் எதிர்கட்சித் தலைவர் யார் என்பதை சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு ஐ.ம.சு.மு. சார்பில் குமார வெல்கம வினதும் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் இரா. சம்பந்தனின் பெயரும் பரவலாக பேசப்படுகிற போதும் சபாநாயகர் கரு ஜயசூரியவினால் இது தொடர்பில் இன்று தீர்ப்பளிக்கப்பட இருப்பதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

எதிர்க்கட்சி பிரதம கொரடா மற்றும் எதிர்தரப்பு பிரதம கொரடா பதவிகளுக்கான பெயர்களும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஐ.ம.சு.மு. சார்பில் எதிர்கட்சித் தலைவராக குமார வெல்கமவையும் எதிர்கட்சி பிரதம கொரடாவாக மஹிந்தானந்த அளுத்கமகேவையும் நியமிக்குமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர்கள் 55 பேருடைய கையொப்பத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மகஜரொன்று கையளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை த.தே. கூட்டமைப்பு, இரா. சம்பந்தனை எதிர்க் கட்சி தலைவராக நியமிக்க வேண்டும் என கோரியுள்ளது. இது தொடர்பில் கட்சிக் கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

ஐ. தே. கவும், ஐ. ம. சு. மு.வும் நல்லிணக்க ஆட்சியமைக்க ஒப்பந்தம் செய்துள்ளதாலும் மு. கா. மற்றும் ஈ. பி. டி. பி. என்பன அரசாங்கத் தரப்பில் அமர இருப்பதாலும் எதிர்த்தரப்பிலுள்ள த. தே. கூ. மற்றும் ஜே.வி. பி. ஆகிய இரு கட்சிகளில் ஒன்றிலிருந்தே எதிர்க் கட்சித் தலைவர் தெரிவு செய்யப்பட வேண்டும் என ஜே. வி. பி. தெரிவித்துள்ளது.

சபாநாயகரின் தீர்ப்பு எவ்வாறு அமையும் என எதிர்பார்த்திருப்பதாக ஜே. வி. பி. தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் நடைபெற்ற கட்சித் தலைவர் கூட்டத்திலும் எதிர்க் கட்சி தலைவர் விவகாரம் ஆராயப்பட்டுள்ளது. இது தொடர்பில் இன்று சபாநாயகர் தனது முடிவை அறிவிப்பார் என எதிர் பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment