Saturday, September 5, 2015

விழுப்புரம் அருகே சென்னை ரயில் கவிழ்ந்து 39 பேர் படுகாயம் : ரயில் போக்குவரத்து கடும் பாதிப்பு!

Saturday, September 05, 2015
விருத்தாசலம்: விழுப்புரம் அருகே நேற்று அதிகாலை மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் கவிழ்ந்ததில் 20 பெண்கள் உள்பட 39 பேர் படுகாயம் அடைந்தனர். அதிருஷ்டவசமாக 1300 பேர் உயிர்தப்பினர்;  விபத்து காரணமாக தென் மாவட்ட ரயில்கள் அனைத்தும் தாமதமாக புறப்பட்டு சென்றன. சென்னையில் இருந்து கர்நாடகா மாநிலம் மங்களூர் செல்வதற்காக மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளுடன் நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் புறப்பட்டு வந்தது. திருச்சி, ஈரோடு, கோவை, பாலக்காடு, கண்ணூர் வழியாக செல்லும் இந்த ரயிலில் 1,300க்கும் அதிகமான பயணிகள் இருந்தனர். இந்த ரயில் நேற்று அதிகாலை 3 மணியளவில் விருத்தாசலம் அருகே பூவனூர் என்ற இடத்தில் வந்த போது திடீரென பின்னால் பயங்கர சத்தம் கேட்டது.
 
இதையடுத்து டிரைவர் உடனடியாக ரயிலை நிறுத்தினார். தூக்கத்தில் இருந்த பயணிகளும் ரயில் பயங்கர குலுங்கலுடன் நின்றதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அப்போது ரயிலின் கடைசியில் இருந்த 2 பெட்டிகள் கவிழ்ந்த நிலையிலும், 3 பெட்டிகள் தடம்புரண்ட நிலையிலும் இருந்தது. உடனடியாக ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த விருத்தாசலம் போலீசார், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பெட்டிகள் கவிழ்ந் ததில் படுகாயம் அடைந்த 20 பெண்கள் உள்பட 39 பேரை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுமார் 1300  பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். விபத்தில் 3 ஏசி பெட்டிகளும் சேதமானது.
 
விபத்து காரணமாக நேற்று அதிகாலை 3 மணியளவில்
 
தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் ரயில்களும், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. தென் மாவட்டத்தில் இருந்து சென்னை சென்ற பொதிகை, முத்துநகர், கன்னியாகுமரி, அனந்தபுரி, சேது ஆகிய ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால், அதில் இருந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். பின்னர் விருத்தாசலத்தில் இருந்து கடலூர் மார்க்கமாக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் அனைத்து ரயில்களும் சுமார் 3 மணிநேரம் தாமதமாக அந்தந்த பகுதிகளுக்கு புறப்பட்டு சென்றது. விபத்தின் போது கவிழ்ந்த 2 ரயில் பெட்டிகள் அங்கிருந்த 3 மின்கம்பங்கள் மீது மோதி நின்றது. இதனால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இதில் 3 மின்கம்பங்களும் சேதமானது. 500 மீட்டர்  தூரத்திற்கு ரயில்பாதை சேதமடைந்தது. இதை சீரமைக்கும் பணியில் 600க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் புதிய  தண்டவாளம் அமைக்கும் பணியிலும்,  மின்பாதையை சீரமைக்கும் பணியிலும்  ஈடுபட்டுள்ளனர்.
 
நான்கு பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் நவீன கருவிகள் மூலம்  பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் பணிகள் முடிந்து ரயில்கள்  இயக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதற்காலிக பாதை  என்பதால் மிதமான வேகத்திலயே ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த இடத்திற்கு நேரில் சென்ற ரயில்வே பாதுகாப்பு ஆணையர் எஸ்.கே மிட்டல் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை ரயில்பாதையில் நடந்து சென்று ஆய்வு செய்தார். அதிகாரிகளுடன் விபத்து குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் கூறும்போது,  ரயில்விபத்து நடந்த இடத்தில், முதற்கட்ட விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. ரயில் விபத்தில், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும், சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
 
ஊழியர்கள் கண்டுகொள்ளவில்லை, பெண் பயணி பேட்டி
 
ரயில் விபத்தில் காயம் அடைந்த கரூரை சேர்ந்த செல்வி கூறுகையில், நாங்கள் அனைவரும் மகளிருக்காக ஒதுக்கப்பட்ட ரயில் பெட்டியில் பயணம் செய்தோம். சென்னையில் ரயில் புறப்படும் போதே பின்னால் சத்தம் கேட்டது. இதுகுறித்து ரயில்வே ஊழியர்களிடம் தெரிவித்த போது, அவர்கள் இதை பெரிதாக கண்டு கொள்ளவில்லை. அதிகாலை 3 மணியளவில் நாங்கள் அனைவரும் தூக்கத்தில் இருந்த போது இந்த பயங்கர விபத்து நடந்தது. இதில் ஒருவர் மீது ஒருவர் விழுந்து படுகாயம் அடைந்தோம். இந்த விபத்தில் நாங்கள் அனைவரும் உயிர் பிழைத்ததே பெரிய விஷயம் என அழுது கொண்டே கூறினார்.
 
ஊழியர்களின் அலட்சியமே காரணம்?
 
விபத்தில் சிக்கிய ரயில் விருத்தாசலம் அருகே பூவனூர் அருகே வந்த போது, மின்பாதையில் தீப்பிழம்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ரயில் டிரைவர் 110 கி.மீட்டர் வேகத்தில் வந்த ரயிலை 2 முறை பிரேக் போட்டு நிறுத்தியதால், ரயில் பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதாக தெரிகிறது. ஆனால் ரயில் பயணிகள் சிலர் கூறும்போது, சென்னையில் இருந்து புறப்படும் போதே பின்பக்க பெட்டிகள் சத்தம் கேட்டதாக கூறியுள்ளனர். ஆனால் ரயில்வே ஊழியர்கள், ரயில் புறப்படும் போது இதுபோன்று சத்தம் கேட்கும் தான் என்று கூறியுள்ளனர். ஆகையால் ரயில்வே ஊழியர்களின் அலட்சியமும் இந்த விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்த அதிகாரியிடம் ரூ.1.5 லட்சம் அபேஸ்
 
சென்னை பள்ளி கல்வித்துறையில் சூப்பிரண்டாக பணிபுரிந்து வரும் பரந்தாமன். நேற்று இரவு அலுவலக வேலை காரணமாக அரியலூர் செல்வதற்காக மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்துள்ளார். அப்போது அவர் ரூ.1 லட்சத்து 47 ஆயிரத்து 200 பணத்தை பையில் வைத்து, கையில் பிடித்தபடியே பயணம் செய்துள்ளார். ரயில் விபத்தில் சிக்கியதால், அதில் பயணம் செய்த அவர் படுகாயம் அடைந்து மயங்கியுள்ளார். இந்த நேரத்தில் மர்ம நபர்கள் சிலர் பரந்தாமனிடம் இருந்த பணத்தை அபேஸ் செய்து கொண்டு தப்பியுள்ளனர்.
ரயில்கள் ரத்து
 
ரயில் விபத்தை தொடர்ந்து விருத்தாசலம்-கடலூர், கடலூர்-திருச்சி, மயிலாடுதுறை-விழுப்புரம், விழுப்புரம்-மயிலாடுதுறை, மதுரை-விழுப்புரம், விழுப்புரம்-மதுரை செல்லும் பயணிகள் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டன.
சிறப்பு பேருந்துகள் இயக்கம்
 
விபத்தின் காரணமாக அவ்வழியாக சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் அவதிப்பட்டனர். இதையடுத்து பயணிகளை ஏற்றிச்செல்ல தமிழக அரசின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.

No comments:

Post a Comment