Wednesday, August 12, 2015

புலிகள் அமைப்புக்கு பணம் வழங்கியமை தொடர்பில் தன்னுடன் விவாதத்திற்கு வருமாறு அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுக்கு சவால்: உதய கம்மன்பில!

Wednesday, August 12, 2015
புலிகள் அமைப்புக்கு பணம் வழங்கியமை தொடர்பில் தன்னுடன் விவாதத்திற்கு வருமாறு அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுக்கு சவால் விடுப்பதாக பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
 
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில்  நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
 
 புலிகள் அமைப்புக்கு 2006 ஆம் ஆண்டு 8000 லட்சம் ரூபாவை வழங்கியமை குறித்து தன்னுடன் விவாதத்திற்குப வருமாறு சம்பிக்க ரணவக்க, மகிந்த ராஜபக்சவுக்கு சவால் விடுத்திருந்தார்.
இது தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கம்மன்பில, இந்த விடயம் குறித்து ரணில் விக்ரமசிங்கவின் சகாக்களுடன் விவாதிக்க மகிந்த ராஜபக்ச வர மாட்டார் எனக் கூறியுள்ளார்.
அதேவேளை வசீம் தாஜூடீனின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிட்ட கம்மன்பில,
 
நான் இது பற்றி யோஷித ராஜபக்சவிடம் விசாரித்தேன். தாஜூடீன் அண்ணன் போன்றவர் என்ற முறையில் அவர் மீது மரியாதை இருந்தது எனவும் அவரை சந்தித்ததில்லை எனவும் அவர் தான் படித்த பாடசாலையில் படித்தவர் எனவும் அதனை தவிர வேறு எந்த தொடர்பும் அவருடன் இருக்கவில்லை என யோஷித கூறினார்.
 
அத்துடன் தாஜூடீனின் சடலம் தோண்டப்படுவது பற்றி பேஷ்புக்கில் பதிவிட்டிருந்த அவரது உறவினர், இதனை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்த வேண்டாம் எனக் கேட்டிருந்தார்.
 
மேலும் தாஜூடீன் பயணம் செய்த கார் எரிந்த நேரமும், அவர் வீடுகளுக்கு அழைத்துச் சென்று விட்ட நண்பர்கள் வழங்கிய சாட்சிகள் மூலமும் தாஜூடீன் தாக்கப்படும் அளவுக்கு நேரம் இருக்கவில்லை எனவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment