Friday, August 14, 2015

நாடு முழுவதுமுள்ள வாக்களிப்பு நிலையங்களில் சுமார் 13,000 கண்காணிப்புப் பணியாளர்கள்!

Friday, August 14, 2015
எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் கண்காணிப்புப் பணிகளுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் நாடு முழுவதுமுள்ள வாக்களிப்பு நிலையங்களில் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட சுமார் 13,000 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சுதந்திரமானதும் அமைதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (பெஃப்ரல்) தெரிவித்துள்ளது.
 
கொழும்பு சினமன்; கிரான்ட் ஹோட்டலில் நேற்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின் போது அந்த அமைப்பு இதனை தெரிவித்துள்ளது.
 
இது தொடர்பில் பெஃப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி கூறுகையில்,
 
நாடு முழுவதுமுள்ள 12,314 வாக்களிப்பு நிலையங்களில் சுமார் 15,044,449 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
 
தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக நாடளாவிய ரீதியில் சுமார் 12,314 நிலையான கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன் பிரதேச செயலாளர் பிரிவுகள் தோறும் கண்காணிப்பு பணிகளுக்காக 335 நடமாடும் வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த வாகங்களில் தலா 4 பேர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தபடுவர்.
 
பிரச்சினைகள், மோதல்கள், அசம்பாவிதங்கள் இடம்பெறலாம் என அடையாளம் காணப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு தலா 4 பேர் அடங்கிய 25 சிறப்பு கண்காணிப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளன.
 
இம்முறை நாடாளுமன்ற தேர்தல் பரப்புரை நடவடிக்கையின் போது தேர்தல்கள் ஆணையாளர் மற்றும் பொலிஸ் மா அதிபரின் சிறப்பான அணுகுமுறைகள் காரணமாக வன்முறை சம்பங்கள் கடந்த தேர்தல்களைவிட குறைவாக இருந்தபோதும் மனித படுகொலைகள் இரண்டு பதிவாகியுள்ளன.
 
ஐக்கிய தேசியக் கட்சியுடன் தொடர்புடையதாக 392 சம்பவங்களும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தொடர்புடைய 376 வன்முறைகள் பதிவாகியுள்ளதுடன் மக்கள் விடுதலை முன்னணி தொடர்புடைய 34 முறைப்பாடுகளும் ஏனைய கட்சிகளுடன் தொடர்புடையதாக 29 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.
இதேவேளைஇ ஐக்கிய தேசியக் கட்சி மீதாக தாக்குதல் சம்பவங்கள்62 பதிவாகியுள்ளதுடன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மீதான 45 சம்பவங்களும் மக்கள் விடுதலை முன்னணி மீதான 08 சம்பவங்களும் ஏனைய கட்சிகள் மீது 10 வன்முறை சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
 
பிரதான இரு கட்சிகள் மீதான தாக்குதல் மற்றும் முறைப்பாடுகள் சம அளவில் காணப்படுகிறதுடன். அரச சொத்துக்களை பரப்புரைக்காக பயன்படுத்திய சம்பவங்களும் பதிவாகியுள்ளன. ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் அமைச்சு பதவிகளில் உள்ளமை காரணமாக பிரதானமாக யார் மீதும் குற்றஞ்சாட்ட முடியாத நிலை காணப்படுகின்றது.
இதேவேளை தமது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கட்டாயமாக விடுமுறை வழங்கி அவர்களை வாக்களிக்க இந்நிறுவனங்கள் இடமளிக்க வேண்டும்.
 
அவ்வாறு விடுமுறை வழங்க தவறினால் அது சிறைத்தண்டனை பெறக்கூடிய குற்றம் என்பதுடன் அது தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
 
இதேவேளை கடந்த ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க மக்கள் முன்வந்ததைப் போல இந்த நாடாளுமன்ற தேர்தலிலும் வாக்களிக்க முன்வரவேண்டும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் 100ற்று 82 சதவீதம் வாக்களிப்பு பதிவாகியிருந்தது.
 
இது மிக முக்கியமான தேர்தல் என்பதால் பொதுமக்கள் தமது தனிப்பட்ட நலன்களை பாராது பொது நலன்களையும் எதிர்காலத்தையும் கருத்திற்கொண்டு சிறப்பான நேர்மையான உறுப்பினர்களை தெரிவு செய்து நாடாளுமன்றுக்கு அனுப்ப வேண்டும் என அந்த அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
 
வாக்களிப்பு நிலையம் தனது தொடரிலக்கம் என்பன தெரிந்திருந்தால் வாக்களிப்பதற்கு வாக்காளர் அட்டை அவசியமில்லை இருந்தாலும் சிரமங்கள் மற்றும் தாமதங்களை தவிர்த்துக் கொள்வதற்காக கட்டாயம் வாக்காளர் அட்டையுடன் வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்லுங்கள். வாக்காளர் அட்டை கிடைக்காதவர்கள் வாக்களிப்பு தினத்தில் உங்கள் வாக்களிப்பு நிலையத்துக்கு சென்று வாக்களார் பட்டியலில் பெயர் இருக்கின்றதா என்று பார்த்து வாக்களியுங்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment