Thursday, July 30, 2015

மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டார்!

புதுடெல்லி:மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி யாகூப் மேமன் இன்று காலை 6.35 மணியளவில் நாக்பூர் சிறையில் தூக்கிலிடப்பட்டார்.மும்பையில் கடந்த 1993ம் ஆண்டு தொடர் குண்டு வெடிப்பு நடந்தது. நாட்டையே உலுக்கிய இந்த குண்டுவெடிப்பில் 257 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளான தாவூத் இப்ராகிம், டைகர் மேமன் ஆகியோர் வெளிநாட்டுக்கு தப்பினர். தாக்குதலுக்கு நிதி திரட்டி கொடுத்ததாக டைகர் மேமனின் சகோதரர் யாகூப் மேமன், நேபாளத்தில் கடந்த 1994ல் கைது செய்யப்பட்டார்.  அவருக்கு 2007ல் மும்பை தடா நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இதையடுத்து, யாகூப் மேமன் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுக்கள், மும்பை ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடியானது.மேமனின் கருணை மனுவும் கடந்தாண்டு மே மாதம் ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டில் யாகூப் தாக்கல் செய்த மறுபரிசீலனை மனுவும் கடந்த ஏப்ரல் 9ல் தள்ளுபடி செய்யப்பட்டது. கடைசி முயற்சியாக சுப்ரீம் கோர்ட்டில் யாகூப் மேமன் சீராய்வு மனு தாக்கல் செய்தார்.
 
மனநல பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாகவும், 20 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருவதாலும், தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை குறைக்க வேண்டுமென யாகூப் மேமன் கூறியிருந்தார். காரணங்களை ஏற்க மறுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, டி.எஸ்.தாக்கூர், ஏ.ஆர் தாவே ஆகியோர் அடங்கிய பெஞ்ச், சீராய்வு மனுவை  கடந்த 21ல் தள்ளுபடி செய்தது.  இதையடுத்து, தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி மகாராஷ்டிரா மாநில ஆளுநருக்கு மீண்டும் கருணை மனு அனுப்பினார் யாகூப். மேலும், தூக்கு தண்டனைக்கு தடை விதிக்கும்படி சுப்ரீம் கோர்ட்டில் யாகூப் மேமன் மீண்டும் மனு செய்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் ஏ.ஆர்.தாவே, குரியன் ஜோசப் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் நேற்று முன்தினம் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர். யாகூப் மேமன் கருணை மனு மீது, மகாராஷ்டிர ஆளுநர்தான் முடிவு செய்ய வேண்டும் என நீதிபதி தாவே தெரிவித்தார்.
 
நீதிபதி குரியன் ஜோசப், ‘‘யாகூப் மேமனின் சீராய் வு மனுவை முடிவு செய்ததில் விதிமுறை மீறல் உள்ளது. ஒருவருடைய உயிர் சம்பந்தப்பட்ட விஷயத்தை தீர்மானிக்கும் சீராய்வு மனு பரிசீலனையில், நீதிமன்றம் வகுத்த சட்ட விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. இந்த குறை சரிசெய்யப்பட வேண்டும். யாகூப் மேமனின் சீராய்வு மனு மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும்’’ என்றார். நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பை அடுத்து, இம்மனுவை 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் விசாரிக்க தலைமை நீதிபதி எச்.எல்.தத்து உத்தரவிட்டார். அதன்படி யாகூப் மேமனின் மனுவை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பிரபுல்லா சி பந்த் மற்றும் அமித்தவா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் நேற்று விசாரித்தது. நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளதாகவும், சீராய்வு மனுவை பரிசீலிக்க வேண்டும் எனவும், யாகூப் மேமனை தூக்கிலிடக் கூடாது எனவும் யாகூப்மேமனின் வக்கீல்கள் வாதாடினர்.
 
அட்டர்ஜி ஜெனரல் முகுல் ரோத்கி வாதிடுகையில், நாட்டில் முதல் முறையாக நடந்த மிகப் பெரிய தீவிரவாத தாக்குதல் இது என்றும், தாக்குதலில் 257 பேர் பலியாயினர்; நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும், இதை நீதிமன்றம் கருத்தில்கொள்ள வேண்டும் என்றார்.  வாதத்தை கேட்ட நீதிபதிகள், மும்பை தடா நீதிமன்றம் பிறப்பித்த வாரண்டில் சட்டரீதியாக குறைபாடு எதுவும் கிடையாது. சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது சரியானது. தூக்கு தண்டனைக்கு தடை விதிக்க முடியாது. முதல் கருணை மனுவை ஜனாதிபதி கடந்தாண்டு நிராகரித்ததை எதிர்த்து, யாகூப் மேமன் மனுத் தாக்கல் செய்யவில்லை. இதனால் 2வது கருணை மனு, தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதில் தடையாக இருக்க முடியாது. இந்த மனு டிஸ்மிஸ் செய்யப்படுகிறது’’ என்றனர். இந்நிலையில் யாகூப் மேமனின் கருணை மனுவை மகாராஷ்டிரா மாநில ஆளுநர் வித்யாசகர் ராவும் நேற்று நிராகரித்தார்.
 
மேலும், பொது  மன்னிப்பு கேட்டு யாகூப் மேமன் சார்பில் 2வது முறையாக ஜனாதிபதி பிரணாப்  முகர்ஜிக்கு நேற்று கருணை மனு அனுப்பப்பட்டது. அதை உள்துறை  அமைச்சகத்துக்கு ஜனாதிபதி பிரணாப் நேற்று அனுப்பினார். இதையடுத்து, கருணை மனுவை நிராகரிக்கும்படி ஜனாதிபதிக்கு  மத்திய அரசு நேற்றிரவு பரிந்துரை செய்தது. கருணை மனுவை ஜனாதிபதி  நேற்றிரவே மீண்டும் நிராகரித்து உத்தரவிட்டார். இதையடுத்து மகாராஷ்டிரா டிஜிபி சஞ்சீவ் தயாள், முதல்வர் தேவேந்திர பட்நாவிஸை சந்தித்து சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், யாகூப் மேமனை நாக்பூர் சிறையில் தூக்கிலிடுவதற்கான பணிகள் துவங்கின.
 
சிறையில் அடைக்கப்பட்ட யாகூப் மேமன் இன்று அதிகாலை 3.30 மணியளவில் எழுந்தார். அவர் குளிப்பதற்கு சிறைத்துறை அதிகாரிகள் அனுமதி அளித்தனர். பின்னர், அவருக்கு புதிய ஆடைகள் கொடுக்கப்பட்டன.   தூக்கிலிடுவதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன. அந்தவகையில், அவருடைய உடல்நிலையை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். இதையடுத்து அவர் தொழுகை செய்ய அனுமதிக்கப்பட்டார். தூக்கு மேடைக்கு யாகூப் மேமன் கொண்டுவரப்பட்டார். சரியாக 6.35 மணிக்கு அவர் தூக்கிலிடப்பட்டார். 30 நிமிடங்கள் கழித்து யாகூப் மேமன் இறந்ததை டாக்டர்கள் உறுதி செய்தனர்.  யாகூப் மேமனின் உடல் மும்பை கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்படும் என தெரிகிறது. மும்பையில் உள்ள அவரது வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  மகாராஷ்டிரா சட்டசபை இன்று கூடுகிறது. அப்போது, யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டது குறித்து முதல்வர் பட்நாவிஸ் அறிவிக்கிறார். -

No comments:

Post a Comment