Sunday, July 26, 2015
தனது தாயை வாளால் வெட்டி காயமேற்படுத்திய முறைப்பாட்டின் அடிப்படையில் முன்னாள் புலிகள் இயக்க அங்கத்தவர் ஒருவரைத் தாம் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, ஏறாவூர் 5 ஆம் குறிச்சியிலுள்ள எம். புஸ்பராணி (வயது 59) என்பவரை வெள்ளிக்கிழமை இரவு அவரது மகன் தலையிலும் சரீரத்தின் வேறு பகுதிகளிலும் வாளால் வெட்டி படுகாயமேற்படுத்தியுள்ளார்.
உடனடியாக தாய் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இச்சம்பவம் நடைபெற்று சற்று நேரத்தில் குறித்த பெண்ணின் மகனான பத்தக்குட்டி சுரேஷ் (வயது 37) எனும் சந்தேக நபரை ஏறாவூர்ப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் முன்னாள் புலி இயக்கத்தின் உறுப்பினர் என்று முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்திருப்பதாக பொலிஸார் கூறினர். இயக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது கண்ணொன்றையும் கையொன்றையும் இழந்திருந்தார் என்றும் தெரியவந்திருக்கின்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஏறாவூர் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

No comments:
Post a Comment