Wednesday, July 29, 2015

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட: முருகன், சாந்தன், பேரறிவாளனின் மரண தண்டனையை ரத்து செய்தது சரிதான் மத்திய அரசின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

Wednesday, July 29, 2015
புதுடெல்லி: ராஜீவ் கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மரண தண்டனையை ரத்து செய்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு சரிதான் என்று  அரசியல் சாசன பெஞ்ச் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பில் திருத்தம் கோரிய மத்திய அரசின் மனுவை தள்ளுபடி செய்தது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த  1991 மே 21ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் நடந்த கூட்டத்தில், புலிகளின் மனித வெடிகுண்டுக்கு பலியானார்.   இந்த படுகொலை தொடர்பாக சிபிஐ தொடர்ந்த வழக்கை விசாரித்த  சிறப்பு நீதிமன்றம் நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் உள்பட 28 பேருக்கு மரண தண்டனை விதித்தது. பின்னர், நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன்  ஆகியோரின் தண்டனை உறுதி செய்யப்பட்டது. ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு மரண தண்டனை ஆயுள் தண்டனையாக  குறைக்கப்பட்டது.
 
மற்றவர்களுக்கான தண்டனை ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஜனாதிபதியிடம் கொடுக்கப்பட்ட கருணை மனுவின் அடிப்படையில்  நளினியின் தண்டனையும் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோர் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி  ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினர்.   கருணை மனு மீது உரிய முடிவு எடுக்கப்படாததால் சென்னை உயர் நீதிமன்றத்திலும் பின்னர் உச்ச நீதிமன்றத்திலும்  வழக்கு தொடரப்பட்டது. 
 
வழக்கை விசாரித்த அப்போதிருந்த தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான உச்ச நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் கடந்த ஆண்டு 3 பேரின் தூக்குத்  தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது. மேலும், 3 பேரும் 22 ஆண்டுகளாக சிறையில் இருப்பதால் அவர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக  அரசு பரிசீலனை செய்யலாம் என்றும் உத்தரவில் நீதிபதிகள் தெரிவித்தனர்.
 
இதையடுத்து, முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகியோருடன் ஆயுள்  தண்டனை பெற்ற  ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரை விடுதலை செய்ய  தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் திருத்தம் செய்யக் கோரியும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு  மே மாதம் தனித்தனி கோரிக்கைகளுடன் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதிகள் இப்ராஹிம் கலிபுல்லா, பினாகி கோஸ்,  ஏஎம்.சாப்ரே, யு.யு.லலிதா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றப்பட்டது.
 
இதையடுத்து, வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ தொடர்ந்த வழக்கு என்பதால் அவர்களை விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம்  இல்லை என்று அரசியல் சாசன பெஞ்ச் இடைக்கால உத்தரவை பிறப்பித்தது. வழக்கின் இறுதி விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்றும் உச்ச நீதிமன்றம்  உத்தரவில் கூறியது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று அரசியல் சாசன பெஞ்சில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. தீர்ப்பில் திருத்தம் கோரிய மனு என்பதால்  திறந்த நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறவில்லை. நீதிபதிகள் அறையில் விசாரணை நடந்தது.
 
வழக்கை விசாரித்த நீதிபதிகள், ராஜீவ் கொலை வழக்கில்  முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து ஆயுள்தண்டனையாக குறைத்து உத்தரவிட்ட உச்ச  நீதிமன்றத்தின் உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. மத்திய அரசின் கோரிக்கையில் முகாந்திரம் எதுவும் இல்லை. எனவே, தீர்ப்பில் திருத்தம் கோரிய மத்திய  அரசின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டது.இந்நிலையில், 7 பேரையும் விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட  வழக்கு உச்ச நீதிமன்ற அரசியல் சாசன பெஞ்சில் விசாரணையில் உள்ளது.

No comments:

Post a Comment