Friday, June 05, 2015
கீவ்: உக்ரைன் நாட்டில் சர்ச்சைக்குரிய பிராந்தியத்தில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும், ராணுவத்துக்கும் இடையே நேற்று மோதல் வெடித்தது. இதில் 17 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்றைய மோதல் பெரும் யுத்தமாக மாறும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக அஞ்சப்படுகிறது.
உக்ரைன் கிழக்கு பகுதியான கிரிமியாவில் ரஷ்யர்கள் அதிக அளவில் வசித்து வந்தனர். இவர்கள் ரஷ்யாவுடன் இணைய விருப்பம் தெரிவித்து வந்தனர். இவர்களுக்கு ரஷ்யா மறைமுகமாக ஆதரவு அளித்து வந்தது. கடந்த ஆண்டு உக்ரைன் அரசுக்கு எதிராக ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் ஆயுத போராட்டம் தொடங்கினர். பின்னர் பொது வாக்கெடுப்பு நடத்தி ரஷ்யாவுடன் கிரிமியாவை இணைத்துக் கொண்டனர்.
கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக ரஷ்ய படைகள் கிரிமியாவில் புகுந்ததால் உக்ரைன் ராணுவத்தால் ஒன்றும் செய்ய முடியவில்லை.கிரிமியாவை தொடர்ந்து மேலும் பலபகுதிகளில் ரஷ்யாவுக்கு ஆதரவாகவும், உக்ரைனுக்கு எதிராகவும் போராட்டங்கள் வெடித்தன. உக்ரைனுக்கு ஐரோப்பிய நாடுகள் ராணுவ உதவியும் நிதி உதவியும் அளிக்க முன்வந்தன. இதை தொடர்ந்து கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக உக்ரைன் ராணுவம் தனது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் இரு தரப்பினருக்கும் இடையே ஜெர்மன் முயற்சி காரணமாக அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலையில் உக்ரைனில் சர்ச்சைக்குரிய டோன்ஸ்டக் நகரில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள பகுதி மீது உக்ரைன் ராணுவம் நேற்று திடீர் தாக்குதல் நடத்தியதாக கிளர்ச்சி படை தலைவர் விளாதிமீர் கோனோநோவ் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த தாக்குதலில் கிளர்ச்சியாளர் பகுதியில் 15 பேர் உயிரிழந்தனர். ராணுவ நடவடிக்கைகளுக்கு கிளர்ச்சியாளர்கள் பதிலடி கொடுத்தனர். இதில் உக்ரைன் அரசு கட்டுப்பாட்டு பிராந்தியத்தில் 2 பேர் கொல்லப்பட்டனர். போர் நிறுத்த ஒப்பந்தத்தை அடுத்தவர் மீறியதாக இரு தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர். தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவி வருகிறது. மீண்டும் முழு அளவிலான யுத்தம் வெடிக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

No comments:
Post a Comment