Tuesday, May 26, 2015

சொத்து மதிப்பு குறைத்து மதிப்பீடு: ஜெயலலிதா விடுதலை குறித்து பரபரப்பு தகவல்!

Tuesday, May 26, 2015
சென்னை: காவலாளிகள் வசிக்கும் ஷெட்டுக்கும், ஜெயலலிதாவின் பல்வேறு வகையான சொத்துக்களும், ஒரே மாதிரியான ரேட் ஃபிக்ஸ் செய்ததன் விளைவாக அவரின் சொத்து மதிப்பு குறைத்து காண்பிக்கப்பட்டு சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து, கர்நாடக உயர்நீதிமன்றத்தால், ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்ட நிலையில், அவர் மீண்டும் தமிழக முதல்வராகியுள்ளார்.
 
ஹைகோர்ட் வழங்கிய தீர்ப்பில் கூட்டல் பிழை இருப்பதாக சிறப்பு வக்கீல் ஆச்சாரியா உள்ளிட்டோர் சுட்டிக் காட்டிய நிலையில், மற்றொரு முக்கிய அம்சத்தை என்.டி.டி.வி செய்தி நிறுவனம் கண்டறிந்து வெளியிட்டுள்ளது.
 
அதாவது ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சென்னை, ஹைதராபாத்திலுள்ள சொத்துக்கள் அனைத்துக்குமே, ஒரு சதுர அடிக்கு ரூ.250 என்ற ஒரே மதிப்பை நிர்ணயித்து நீதி வழங்கப்பட்டுள்ளது என்று அந்த செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
ஆனால், வழக்கில் பொதுப்பணித்துறை போட பரிந்துரைத்த மதிப்பு சதுர அடிக்கு ரூ.310 ஆகும். பொதுவாக பொதுப்பணித்துறை உண்மையான மார்க்கெட் நிலவரத்தைவிட சொத்துக்களை குறைத்தே மதிப்பிடும். ஆனால் அந்த பொதுப்பணித்துறை பரிந்துரையைவிடவும், தீர்ப்பில் சொத்து மதிப்பு மேலும் குறைக்கப்பட்டுள்ளது.
 
என்.டி.டி.வி செய்தி நிறுவனம் மேலும் கூறியுள்ளதாவது: ஒரு சதுர அடியின் மதிப்பு ரூ.250 என்று எப்படி நீதிபதி முடிவு செய்தார் என்று பார்த்தால், தீர்ப்பின் 786வது பக்கத்தில் விடையுள்ளது.
சென்னையில், ஒரு ஷெட் கட்ட சராசரியாக ரூ.250 ஆகும் என்று பொதுப்பணித்துறை கூறியதை மேற்கோள்காட்டி இந்த மதி்ப்புக்கு வந்ததாக அதில் கூறப்பட்டுள்ளது.
 
சென்னையின் வெவ்வேறு பகுதிகளிலுள்ள ஜெயலலிதாவின் சொத்துக்கள் அத்தனைக்கும் ஒரே மதிப்பு எப்படி வரும். சசிகலாவின் சொத்துக்களுக்கும் அதே மதிப்புதான் போடப்பட்டுள்ளது. இதில் ஹைதராபாத்திலுள்ள ஒரு சொத்தும் அடங்கும். அந்த சொத்துக்கும் இதே ரேட்தான்.
 
அதாவது, பண்ணை வீடு, பங்களா, அப்பார்ட்மென்ட் என அனைத்துக்கும் போடப்பட்டுள்ள மதிப்பு, சதுர அடிக்கு ரூ.250 மட்டுமே. இதன்மூலம் ரூ.27 கோடிக்கு காண்பிக்கப்பட்டிருந்த சொத்து மதிப்பு ரூ.5 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த சொத்து வித்தியாசம், வழக்கில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.
 
நாங்கள் (என்.டி.டி.வி), இரு இடங்களை விசிட் செய்து உண்மையை அறிய முயன்றோம். அதில் ஒன்று, தென் சென்னையின் தொழில்பேட்டையில் அமைந்திருந்த பிரிண்டிங் பிரஸ். மற்றொன்று, மத்திய சென்னையின் வணிக முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் அமைந்துள்ள கமர்சியல் காம்ப்ளக்ஸ்.
 
பி.வி.ஆச்சாரியாவிடம் கேட்டபோது "ஒரு ஷெட்டுக்கான மதிப்பை, எப்படி அனைத்து சொத்துக்களுக்கும் பொருத்தி பார்க்க முடியும்" என்று கேள்வி எழுப்பினார். இவ்வாறு என்.டி.டி.வி செய்தி வெளியிட்டுள்ளது. பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமியும், இந்த கட்டுரையை தனது டிவிட்டர் தளத்தில் சுட்டிக் காட்டி, ஜெயலலிதா, உங்கள் ராஜினாமா கடிதத்தை தயார் செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment