Wednesday, May 27, 2015

நாட்டில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தேவை என்ற மக்கள் நிலைப்பாடு உருவாகியுள்ளது!

Wednesday, May 27, 2015
நல்லாட்சி அரசாங்கம் தனது 150 வது நாளை பூர்த்தி செய்யும் தருணத்தில் நாட்டிற்குள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தேவை என்ற மக்கள் நிலைப்பாடு உருவாகியுள்ளதாக மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
 
அளுத்கம நகர சபை மண்டபத்தில் அண்மையில் நடைபெற்ற ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்பாட்டாளர்களுக்கு தெளிவுப்படுத்தும் கூட்டத்தில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
 
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி மாத்தறையில் அடுத்த மாதம் 12 ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டத்திற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
 
நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்து 150 நாட்கள் நெருங்கும் தருணத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாட்டுக்கு மீண்டும் தேவை என்ற மக்கள் நிலைப்பாடு உருவாகியுள்ளதுடன் அது பெரும் மக்கள் அலையாக மாறி வருகிறது என பிரசன்ன ரணதுங்க கூறியுள்ளார்.
 
அதேவேளை அங்கு உரையாற்றிய தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ, எதிர்வரும் 12 ஆம் திகதி மாத்தறையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் 75 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார்.
 
அவர் மேலும் தெரிவிக்கையில், நாங்கள் மகிந்த ராஜபக்சவை மீண்டும் அரசியலுக்கு கொண்டு வர போராட்டங்களை நடத்தும் போது, அரசாங்கம் இந்த போராட்டத்தின் கூர்மையை இல்லாமல் செய்ய பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
 
அரசாங்கம் எங்களை சிறைகளில் தள்ள முயற்சித்து வருகிறது. அடுத்தடுத்து 100 சிறைகளில் எம்மை தள்ளினாலும் மகிந்தவை பிரதமராக்க வேண்டும் என்ற எமது போராட்டத்தை இந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் நிறுத்த முடியாது எனவும் விமல் வீரவன்ஸ குறிப்பிட்டுள்ளார்....
 
எதிர்வரும் ஆகஸ்ட் மாதமளவில்  நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில், தாம் போட்டியிடப் போவதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனக்கு நெருக்கமானவர்களிடம் உறுதிப்படுத்தியுள்ளதாக   சீன செய்தி நிறுவனமான ´சின்ஹூவா´  தகவல்  வெளியிட்டுள்ளது.
 
எதிர்க்கட்சியைச் சேர்ந்த- தனது பெயரை வெளியிட விரும்பாத முக்கிய பிரமுகர் ஒருவரை மேற்கோள்காட்டி ´சின்ஹூவா´ இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.
தமக்கு வெளிப்படையாக ஆதரவளிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் மஹிந்த ராஜபக்ஷ ஏற்கனவே வாராந்த கலந்துதுரையாடல்களை ஆரம்பித்துள்ளார்.
ராஜபக்ஷவின் அரசியல் எதிர்காலம் குறித்து இந்தக் கூட்டங்களில் கலந்துரையாடப்படுகிறது” என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இதேவேளை, மஹிந்த ராஜபக்ஷ நிழல் அமைச்சரவை ஒன்றை அமைத்து வாராந்தம் கூட்டங்களை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியிருப்பதாகவும்  ´சின்ஹூவா´ செய்தி சேவை  சுட்டிக்காட்டியுள்ளது.
 
கடந்த ஜனவரி மாதம் எட்டாம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில்  மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்தார்.  இதனையடுத்து எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் நோக்கில்  அரசியல் காய்நகர்த்தும் செயற்பாட்டில்  மஹிந்த தரப்பு ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment