Wednesday, May 27, 2015

20வது திருத்தம் தொடர்பில் இன்று இறுதி தீர்மானம்!

Wednesday, May 27, 2015
புதிய தேர்தல் முறைமை உள்ளடக்கப்பட்ட 20 வது அரசியலமைப்பு திருத்தத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பது தொடர்பான இறுதி தீர்மானம் இன்று இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்படவுள்ளது.

உத்தேச புதிய தேர்தல் முறை மாற்றத்தின் போது தெரிவு செய்யப்பட வேண்டிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பில் அரசியல் கட்சிகள் நேற்று தீர்மானங்களை இறுதி செய்யவில்லை.

புதிய தேர்தல் முறையின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 225 ஆகவோ அல்லது 255 ஆக தெரிவு செய்யவேண்டும் என இரண்டு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் இன்றைய கூட்டத்தில் இறுதி தீர்மானம் எட்டப்படும் பட்சத்தில் விரைவில் 20 வது திருத்தம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது...
 
 
கால தாமதமின்றி 20 திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட 20ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து தரப்புக்களும் அரசியல் சாசன திருத்தங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றின் சட்டவிளக்கத்தை பெற்றுக்கொள்ள உத்தேச சட்டத்தை அனுப்பி வைத்து தேவையான திருத்தங்களை செய்து, பாராளுமன்றில் சட்டம் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

விருப்பு வாக்கு முறைமையை இல்லாமல் செய்து புதிய தேர்தல் முறைமை ஒன்று அறிமுகம் செய்ய ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் வாக்குறுதிகளில் 20ம் தீருத்தச் சட்ட அமுலாக்கம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அதனை காலம் தாமதப்படுத்துவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
                       

No comments:

Post a Comment