Tuesday, January 13, 2015
இலங்கை::நாட்டில் மக்கள் கிளர்ச்சியை ஏற்படுத்தி ஆட்சி மாற்றத்தை உருவாக்க முயன்ற மேற்குலக நாடுகளின் முயற்சிகள் தோல்வி கண்டுள்ளதோடு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசியல் சாணக்கியத்தோடு ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுத்தமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும் எனத் தெரிவித்த தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் வசந்த பண்டார புதிய பிரதமரின் கீழ் புதியதொரு அமைச்சரவையே இயங்குமென்றும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக டாக்டர் வசந்த பண்டார மேலும் தெரிவிக்கையில்;
அரபு நாடுகளை போன்று மக்கள் கிளர்ச்சியை இலங்கையில் ஏற்படுத்தி இரத்த ஆற்றை ஓட வைத்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதே மேற்குலக நாடுகளின் நிகழ்ச்சி நிரலாக இருந்தது.
ஆனால், முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் அரசியல் சாணக்கியத்தால் சுமுகமான முறையில் ஆட்சி மாற்றம் நடைபெற்றது. இது மகிழ்ச்சியளிக்கும் விடயமாகும்.
அத்தோடு தேர்தலும் நீதியும் சுதந்திரமானதுமாக நடைபெற்றது. இதுவும் வெளிநாடுகளின் தலையீடுகளுக்கு இடமளிக்க முடியாத நிலைமையை ஏற்படுத்தியது.
அதேவேளை, அரசியலமைப்புக்கமைய புதிய பிரதமரின் கீழ் புதியதொரு அமைச்சரவையே நியமிக்கப்படும். இதன் கீழ் இப்பாராளுமன்ற காலம் முடியும் வரை ஆட்சி தொடரும் என்றும் டாக்டர் வசந்த பண்டார தெரிவித்தார்.

No comments:
Post a Comment