Thursday, January 15, 2015

கிழக்கு முதலமைச்சர் பதவிற்கு தமிழ் கூட்டமைப்பு குறிவைப்பு, மாகாண சபை கலைக்கப்படும் சாத்தியம்?.

Thursday, January 15, 2015
கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறிவைத்து செயற்படுவதாக தெரியவருகின்றது. 
 
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் நஜீப் ஏ. மஜீதினை முதலமைச்சராகக் கொண்ட கிழக்கு மாகாண சபையில் ஆட்சி மாற்றம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நேற்றிரவு முக்கிய கூட்டமொன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.
 
கிழக்கு மாகாண சபை தொடர்பான இந்தக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், செயலாளர் நாயகம் ஹசன் அலி எம்.பி, ஹரீஸ் எம்.பி, கல்முனை முதல்வர் நிசாம், சட்டத்தரணி ஏ.எம்.பாயிஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி, பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சுரேஷ் பிரேமசந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து ஆட்சி அமைக்கும் பட்சத்தில் மாகாண முதலமைச்சர் பதவியினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கப்பட வேண்டும் என இதன்போது கேட்டுள்ளது.
 
இதே வேளை முதலமைச்சர் பதவியினையும் ஒரு மாகாண சபை அமைச்சர் பதவியினையும் முஸ்லிம் காங்கிரஸிற்கு வழங்குமாறு அக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. 
 
மிக நீண்ட நேரம் இடம்பெற்ற இச்சந்திப்பில் முதலமைச்சர் பதவி தொடர்பில் இரு கட்சிக்குமிடையில் இழுபறி நிலை தோன்றியதால் எவ்வித இறுதி முடிவும் எடுக்கப்படாமல் கூட்டம் முடிவடைந்துள்ளது.
 
எவ்வாறாயினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 11 உறுப்பினர்கள், முஸ்லிம் காங்கிரஸின் 8 உறுப்பினர்கள், ஐ.தே.கட்சியின் 4 உறுப்பினர்கள், மக்கள் காங்கிரஸின் 2 உறுப்பினர்கள் மற்றும் மைத்திரியின் ஒரு உறுப்பினர் ஆகியோரைக் கொண்டு மொத்தமாக 26 உறுப்பினர்களைக் கொண்ட புதிய ஆட்சி விரைவில் கிழக்கு மாகாண சபையில் மலரும் என எதிர்பார்க்கப்பட்டது.
 
இருந்த போதிலும் முஸ்லிம் காங்கிரஸூக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பு தோல்வியில் முடிவடைந்துள்ளதால் கிழக்கு மாகாண சபை விரைவில் கலைக்கப்படும் அறிகுறி ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment