Sunday, January 11, 2015

இராணுவ சதிப்புரட்சி மூலம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அதிகாரத்தை கைப்பற்ற முயற்சித்தார் என்று கூறப்படும் கதைகளை முற்றாக நிராகரிக்கின்றோம்: உதய கம்மன்பில!

Sunday, January 11, 2015      
இலங்கை::இலங்கையில் இராணுவ சதிப்புரட்சி மூலம் முன்னாள் ஜனாதிபதி அதிகாரத்தை கைப்பற்ற முயற்சித்தார் என்று கூறப்படும் கதைகளை முற்றாக நிராகரிப்பதாக தூய்மையான ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
 
ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அடுத்தக்கட்ட செயற்பாடுகள் குறித்து தெளிவுப்படுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று  அவர் இதனை கூறியுள்ளார்.
 
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஜனநாயகத்தை மதித்த ஒரு தலைவர்.தோல்வியை உணர்ந்து கொண்ட அவர் இன்றைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேசி ஜனநாயகத்தை மதித்து நேற்று முன் அதிகாலையிலேயே அலரி மாளிகையை விட்டு வெளியேறினார்.
 
அதிகாரத்தில் தொடர்ந்தும் இருக்க அவர் எந்த சந்தர்ப்பத்திலும் இராணுவத்தை பயன்படுத்தவில்லை.மகிந்த ராஜபக்ஷ பதவியில் இருந்து விலகிச் சென்றாலும் அவர் அதிகாரத்தில் இருக்க முயற்சித்தார் என்று எதிர்க்கட்சிகளை சேர்ந்த சிலர் கதைகளை கூறி வருகின்றனர்.ஜனநாயக தலைவர் ஒருவரை சர்வாதிகாரியாக கருதி அப்படியான கதைகளை கூறுவதை நிராகரிக்கின்றோம்.
 
புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டம் எதார்த்தமான மாற வேண்டும் என பிரார்த்திக்கின்றோம். வீதிகளை நிர்மாணிக்கும் போது கமிஷன் பெற்றதாக கூறியவர்கள் புதிதாக வீதிகளை நிர்மாணிக்கும் போது தயாரிக்கும் மதிப்பீட்டு அறிக்கைகள் குறித்து வழிப்புடன் அவதானிப்போம் என  உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment