Saturday, January 10, 2015

இலங்கையில் புதிய அதிபர் பதவியேற்பு : தமிழக மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுமா?

Saturday, January 10, 2015
திருச்சி::தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும்போது இலங்கை கடற்படையினர் அவர்களை தாக்குவதும், வலைகளை அறுத்து மீன்களை பறித்து விரட்டியடிப்பது, படகுகளுடன் மீனவர்களை சிறைபிடித்து செல்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காரைக்கால் மீனவர்கள் 15 பேர் தற்போது இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
 
தமிழக மீனவர்களின் 87 விசைபடகுகளை இலங்கை பறித்து வைத்துள்ளது.  லட்சக்கணக்கான மதிப்பிலான விசைபடகுகளை இழந்து வாழ்வாதாரமின்றி தவித்து வருகின்றனர். இதனால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலையிழந்து வறுமையில் வாடிவருகின்றனர். இதனால் மீனவர்கள் கவலைஅடைந்துள்ள நிலையில் தற்போது இலங்கை புதிய அதிபரான மைத்ரிபால சிறிசேனவால் தமிழக மீனவர்களுக்கு விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும் என மீனவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இதுகுறித்து தேசிய மீனவர் பேரவை தலைவர் இளங்கோவன் கூறியதாவது:  பாரம்பரிய மீன்பிடி பகுதியான கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிப்பதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் மீதான தாக்குதல் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இலங்கையில் புதிய அதிபராக மைத்ரிபாலசிறிசேன வெற்றி பெற்றது தமிழக மீனவர்கள் மற்றும் தமிழர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
எனவே  இந்திய மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணவும், இந்திய-இலங்கை மீனவர்கள் சுதந்திரமாக பிரச்னையின்றி மீன்பிடிக்கவும், இந்திய-இலங்கை மீனவர்கள் 3ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த இலங்கை அதிபருடன் பிரதமர் மோடி பேசவேண்டும் என மீனவர்கள் சார்பில் வலியுறுத்துகிறோம். நிரந்தர தீர்வு கிடைக்கும் என எதிர்பார்த்துள்ளோம்.இவ்வாறு இளங்கோவன் கூறினார்.

தமிழக கடலோர விசைபடகு மீனவர் சங்க தலைவர் போஸ், அருளானந்தம் ஆகியோர் கூறியதாவது:  1987க்கு பின்னர் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது இலங்கையில் அதிபர் சிறிசேனா, பிரதமராக ரணில் விக்ரமசிங்கே ஆகியோர் பதவியேற்றது தமிழக மீனவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியதுடன் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
 
எனவே பிரதமர் மோடி விரைவில் இலங்கை அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழக மீனவர்களின் படகுகளை மீட்டுதருவதுடன், இந்திய-இலங்கை மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தரவேண்டும். ஏற்கனவே 2001ல் ரணில் விக்ரமசிங்கே பிரதமராக இருந்தபோது, பிரதமர் வாஜ்பாயுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் மனிதாபிமான முறையில் இந்திய மீனவர் பிரச்னையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒப்பந்தம் செய்தனர். தற்போது ரணில் பிரதமராக பொறுப்பேற்றுள்ளதால் அந்த ஒப்பந்தப்படி மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு எடுக்கவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment