Monday, December 8, 2014

பாஜக கூட்டணியிலிருந்து வைகோ விலகியது நல்லது: எச்.ராஜா கருத்து!

Monday, December 08, 2014
சென்னை:கூட்டணியிலிருந்து மதிமுக வெளியேறியது பா.ஜ.க விற்கு நல்லது என அக்கட்சியின் தேசிய செயலர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.
 
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டது மதிமுக. மத்தியில் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு பதவியேற்றதிலிருந்தே, பா.ஜ.க மற்றும் மதிமுக இடையே இலங்கை விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் மோதல் உருவானது. இது தமிழகத்திலும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மோடியை வெளிப்படையாக விமர்சனம் செய்துவந்தார் வைகோ.
 
மோடி பற்றிய வைகோவின் இந்த விமர்சனங்களுக்கு பதிலளித்து சில தினங்களுக்கு முன் பேசிய பா.ஜ.கவின் தேசிய செயலர் எச். ராஜா “ மோடியை வைகோ தொடர்ந்து விமர்சித்துவந்தால் அவர் செல்லும் இடத்திலிருந்து பத்திரமாக திரும்பவர முடியாது“ என வெளிப்படையாக எச்சரிக்கும் விதத்தில் கருத்து தெரிவித்தார்.
 
இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம், உயர்நிலைக்குழு கூட்டம் ஆகியவை சென்னை எழும்பூரில் உள்ள தாயகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
 
வைகோவின் இந்த முடிவுபற்றி வைகோவுடன் நேரடியாக முரண்பட்ட எச். ராஜாவிடம் கருத்து கேட்கப்பட்டபோது, பா.ஜ.கவிற்கும் மதிமுகவிற்கும் கொள்கை ரீதியான முரண்கள் உள்ளது எனவும் வைகோவின் இந்த முடிவு பா.ஜகவிற்கு நல்லது என்றும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment