Monday, December 08, 2014
தூத்துக்குடி::கடல் பகுதியில் எல்லை தெரியாமல் அதனை தாண்டி செல்லும் மீனவர்களை எச்சரிக்கும் செல்போன் பயன்பாட்டு தொழில் நுட்பத்தை தூத்துக்குடியை சேர்ந்த பொறியாளர் கண்டுபிடித்துள்ளார்.
தூத்துக்குடி பெரைரா தெருவை சேர்ந்தவர் ரெசிங்கடன். மின்னணு தொடர்பியல் துறை பொறியியல் பட்டதாரியான இவர், கணினி, கைபேசிகளில் பயன்படுத்தப்படும் மென்பொருள்களை வடிவமைக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளர். இவர் கடல் எல்லை பற்றி தெரியாமல் இந்திய எல்லையை தாண்டும் மீனவர்களின் நலனை கருத்தில் கொண்டு செல்போனில் பயன்படுத்தும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கி உள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில்,
தமிழகம், இலங்கைக்கு இடையேயான கடல் பகுதி ஏறத்தாழ 1,100 கி.மீ தொலைவு உள்ளது. மேலும் கடல் எல்லை என்பது ஒரே நேர்கோட்டில் இல்லாமல் கைகளின் ரேகைகள் போல் வளைந்தும், நெளிந்தும் உள்ளது. இதில் இந்திய கடல் எல்லை, சர்வதேச கடல் எல்லை, இலங்கை கடல் எல்லை எங்குள்ளன என்பதை கண்டறிவதில் மீனவர்களுக்கு எழும் பிரச்சினையால்தான் எல்லை தாண்டி சென்று இலங்கை கடற்படையினரிடம் சிக்கி கொள்கின்றனர். அவர்களுக்கு கடல் எல்லைகள் குறித்து தெளிவாக தெரிவிக்கும் விதமாகவும், எல்லை தாண்டும் நேரத்தில் எச்சரிக்கை விடுக்கும் விதமாகவும் ஒரு கருவி இல்லாமல் இருந்து வந்தது. இந்த குறையை நீக்கும் வகையில் எல்லை தாண்டும் மீனவர்களை எச்சரித்து உடனடியாக நமது எல்லைக்குள் திரும்ப வைக்கும் விதமாக ஸ்மார்ட்போனில் இயங்கும் இந்த ஆண்ட்ராய்டு அப்ளிகேசனை தயாரித்துள்ளேன்.
இந்த அப்ளிகேசனை ஆண்ட்ராய்டு செல்போன்களில் இன்ஸ்டால் செய்து கொண்டால் போதுமானது. இதற்காக எவ்வித செலவும் செய்ய தேவையில்லை. தற்போது பலரும் ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்துவதால் இந்த பயன்பாட்டை எளிதாக இன்ஸ்டால் செய்து கொள்ள முடியும். மீனவர்களுக்கு எளிதாக புரியும் விதமாக தமிழில் வடிவமைத்துள்ளேன். இதில் முழுக்க முழுக்க கடல் எல்லைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
எல்லையை தாண்டும் போது இது எச்சரிக்கை ஒலி எழுப்பி மீனவர்களை எச்சரிக்கை செய்து விடும். தமிழே தெரியாவிட்டாலும் பரவாயில்லை. இது எல்லைகளை வெவ்வேறு நிறங்களில் செல்போன் திரையில் காண்பித்து எச்சரிக்கை செய்து விடும். செல்போன் சிக்னலே கிடைக்காத பகுதியிலும் ஆப்லைனில் இயங்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார்.
No comments:
Post a Comment