Friday, December 19, 2014

வரலாற்று நாயகனுக்காக முல்லை மக்கள் ஒன்றுசேர்ந்து வாக்களிப்போம்! ஜனாதிபதி வருகையோடு வடக்கில் சூடு பிடிக்கிறது தேர்தல் பிரசாரம்!

Friday, December 19, 2014      
இலங்கை::வரலாற்று நாயகனுக்காக முல்லை மக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து வாக்களித்து வரலாற்று  வெற்றியளிப்போம் என முல்லைத்தீவு பிரதேச சபைத்தலைவர் பசுபதி சீவரத்தினம் தெரிவித்துள்ளார்.
 
நேற்று (18) முல்லைத்தீவில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் 2015 ஐந்தாவது தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், மஹிந்த சிந்தனையின் மூலம் 2005 ஆம் ஆண்டு முதல் சர்வதேச எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் சமாதானத்தினை ஏற்படுத்தி யுத்தத்தினை நிறுத்தியவர். 2010 ஆம் ஆண்டில் எமது தேசத்தை தென்கிழக்காசியாவில் அதிசயமாக மாற்ற கடந்த 05 ஆண்டு காலமாக பாடுபட்டு வருகிறார். நாம் தற்பொழுது செல்லும் வழிகள் முழுதும் மஹிந்த ராஜபக்ஷவினால் ஏற்படுத்தப்பட்ட அபிவிருத்தியையே காணுகிறோம்.

தேசிய விடுதலை என்ற பெயரில் இழந்த இழப்புக்களை மூவின மக்களுக்கும் அர்த்தமுடைய மாற்றுவதற்காக செயற்படும் ஒரேயொரு வரலாற்று மனிதர் மஹிந்த ராஜபக்ஷவே. வடமாகாணத்தின் தேசிய சின்னமாக பனை மரம் கருதப்படுவது உண்மை தேசிய பொருளாதாரத்துக்கு அடிப்படை பனை. ஆனால் தேசிய போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பனையை மறந்து அழித்தனர். ஆனால் எமது ஜனாதிபதி அதனை மறக்கவில்லை மறக்காது பனை அபிவிருத்திக்குரிய சேவைகளைச் செய்கிறார்.

அவரது மஹிந்த சிந்தனை பாரம்பரிய மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் செயற்படுத்தப்பட்டு வருகிறது. எனவே எமது சிந்தனைகளை இலட்சியங்களை சின்னங்களை அழியவிடாது பாதுகாத்து இன்றும் அபிவிருத்தி பாதையில் இட்டுச் செல்கின்ற வரலாற்று நாயகனுக்கு வாக்களித்து வெற்றிபெறச்செய்வோமாக என்று தெரிவித்தார்.
 
ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஐ.ம.சு.மு. வேட்பாளர் மகிந்த ராஜபக்ஷ வடக்கு மாகாணத்துக்கு வந்துள்ளதையடுத்து இம்மாகாணத்திலும் தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளன.
தொடர்ந்து பொது எதிரணியினரும் அடுத்த வாரமளவில் வடக்கில் தமது தேர்தல் பிரசாரங்களை ஆரம்பிக்கத் தயாராகி வருகின்றனர்.

மகிந்த ராஜபக்ஷ தனது தேர்தல் பிரச்சாரத்தை இறுதி யுத்தம் நடைபெற்ற முல்லைத்தீவில் நேற்று வியாழக்கிழமை ஆரம்பித்தார். தொடர்ந்து அவர் கிளிநொச்சிக்கும் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார். வடக்கின் ஏனைய மாவட்டங்களிலும் அவரது பிரச்சாரங்கள் தொடரவுள்ளன.

No comments:

Post a Comment