Friday, December 19, 2014

வல்வெட்டித்துறை நகரசபையில் உள்முரண்பாடுகளால் மூக்குடைபட்ட கூட்டமைப்பு!

Friday, December 19, 2014      
இலங்கை::வல்வெட்டித்துறை நகரசபையில் கடந்த ஆண்டு பொதுமக்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட வரவுமிசெலவுத் திட்டத்தை இரத்துச் செய்யவேண்டுமென்றும், தவிசாளரின் தன்னிச்சையான செயற்பாடுகள் குறித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கோரி யாழ். மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி கனகா சிவபாதம் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளார்.
 
வல்வெட்டித்துறை நகரசபையின் உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் செயலாளருமான சூ.சே.குலநாயகம் மற்றும் உப தலைவர் க.சதீஸ், உறுப்பினர்களான ம.மயூரன், கட்சி நிறுவனத்தில் கடமையாற்றும் ச.பிரதீபன், கோ.கருணானந்தராசா ஆகியோரினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
 
நகரசபை தலைவர் ந.அனந்தராஜ், செயலாளர் மற்றும் வரவுமிசெலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த உறுப்பினர்கள், முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன், உள்ளூராட்சி ஆணையாளர், உள்ளூராட்சி உதவி ஆணையாளர், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட பதினாறு பேருக்கு எதிரான இந்த வழக்கு கடந்த ஒரு வருடமாக யாழ். மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
 
குலநாயகம் மற்றும் ஆளுங்கட்சி உறுப்பினர்களால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மனுதாரர்களின் சார்பில் சட்டத்தரணி கனகசிங்கமும் எதிர்மனுதாரர்களின் சார்பில் அரச சட்டத்தரணி மோகனராஜா
 
மற்றும் சட்டத்தரணிகளான தேவராஜா ரெங்கன், விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆகியோரும் ஆஜராகி இருந்தனர். இருதரப்பு சட்டத் தரணிகளினதும் வாதங்களைச் செவிமடுத்த நீதிமன்றம் நகரசபையை முடக்கும் முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மனுதாரர்களினால் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களில் உண்மை எதுவும் இல்லை என்றும் குறிப்பிட்டு,கடந்த பதினொரு மாதங்களாக இடம்பெற்று வந்த வழக்கைத் தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியது.

No comments:

Post a Comment