Tuesday, December 2, 2014

வைகோவை மிரட்டும் சுப்பிரமணியன் சுவாமி: புலிகளை தொடர்ந்தும் ஆதரித்தால் மதிமுகவையும் தடை செய்வேன்!

Tuesday, December 02, 2014
சென்னை::மதிமுக பொதுச்செயலர் வைகோ அரைவேக்காட்டுத்தனமாக பேசி வருவதாகவும் புலிகளை தொடர்ந்தும் ஆதரித்தால் மதிமுகவை தடை செய்ய நடவடிக்கை எடுப்பேன் என்றும் பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
இது தொடர்பாக சுப்பிரமணியன் சுவாமி அளித்துள்ள பேட்டி விவரம்: ராஜிவ் காந்தியை கொன்ற  புலிகளை நான் என்றைக்கும் ஏற்க மாட்டேன். அவர்களை ஆதரிப்பவர்களையும் ஏற்க மாட்டேன்.
 
இந்தியாவில் அமைதி நிலவ வேண்டும் என்றால் விடுதலைப் புலிகள் போன்ற தீவிரவாத அமைப்புகளை என்றைக்கும் ஏற்க முடியாது.
 
தீவிரவாத அமைப்பு என தெரிந்தும் வைகோ  புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக பேசி வருவது தேசியத்தின் மீது அவர் வைத்திருக்கும் அவநம்பிக்கையின் வெளிப்பாடு என்பதை இந்த நாடே அறியும்.
 
மத்திய அரசு தன் விருப்பப்படி நடக்கவில்லை என்பதற்காக மோடியை வைகோ விமர்சிக்கிறார்.
 
அதனால்தான் வைகோவை கூட்டணியில் இருந்து வெளியேறும்படி கேட்டுக் கொண்டேன்.
 
அதைத் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலர் எச்.ராஜாவும் இதே கருத்தைத் தெரிவித்தார். வைகோவுக்கு நாவடக்கம் தேவை என்றும் ராஜா சொல்லியிருக்கிறார்.
 
அதில் என்ன தவறு என, புரியவில்லை. இதற்காக அவரது வீட்டை ம.தி.மு.க.வினர் முற்றுகையிட முயன்றுள்ளனர்.
 
தமிழகத்தில் எனக்கோ என்னை சார்ந்தவர்களுக்கோ சிறு பிரச்னை கூட இருக்கக்கூடாது என முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழங்கி உள்ள நிபந்தனை ஜாமீனில் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 
அதனால் தான் இந்த விஷயத்தில் தமிழக அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஜெயலலிதாவின் ஜாமீனை ரத்து செய்ய மனு போடுவேன் என சொன்னேன்.
 
இதை முழுமையாக அறியாமல் உச்சநீதிமன்றம் என்ன சுப்பிரமணியன் சுவாமி வீட்டு சொத்தா என வைகோ கேட்டிருக்கிறார்.
 
இப்படித்தான் அரைவேக்காட்டுத்தனத்துடன் வைகோ பேசிக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்ல  புலிகளை எதிர்ப்பதால் டபுள் ஏஜன்ட் என கூறியுள்ளார்.
 
நான் டபுள் ஏஜன்ட் யாருக்கு என அவர் சொல்லவில்லை. அவர் தான்  புலிகள் ஏஜன்டாக செயல்படுகிறார்.
 
தொடர்ந்து அவர் இப்படியே செயல்பட்டால் மதிமுகவையும் தடை செய்யும் முயற்சியில் இறங்குவேன். இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment