Tuesday, December 2, 2014

ஜம்மு காஷ்மீர், ஜார்கண்டில் இரண்டாம் கட்ட தேர்தல் : விறுவிறுப்பான வாக்குபதிவு: பாதுகாப்பு படையினர் குவிப்பு: எல்லைகளுக்கு சீல்வைப்பு!

Tuesday, December 02, 2014
ராஞ்சி: ஜம்மு காஷ்மீர் மற்றும் ஜார்கண்டில் இன்று இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வாக்குபதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. சட்டீஸ்கரில் மாவோயிஸ்ட்கள் தாக்குதல் காரணமாக ஜார்கண்டில் சுமார் 45 ஆயிரம் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். எல்லைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன.ஜம்மு காஷ்மீர் மற்றும் ஜார்கண்டில் நவம்பர் 25ம் தேதி தொடங்கி டிசம்பர் 20 வரை 5 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்ப்பட்டது. கடந்த 25ம் தேதி முதல் கட்டமாக 15 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 72 சதவீத வாக்குகள் பதிவாகின. பிரிவினைவாதிகள் விடுத்த தேர்தல் புறக்கணிப்பை மக்கள் ஏற்கவில்லை என்பதை இந்த வாக்குபதிவு எடுத்துக் காட்டியது. இரண்டாம் கட்டமாக 18 தொகுதிகளில் இன்று வாக்குபதிவு நடைபெறுகிறது.

 இதில் போட்டியிடும் 175 வேட்பாளர்களின் வெற்றி தோல்வியை 15 லட்சத்து 35 ஆயிரத்து 87 வாக்காளர்கள் நிர்ணயம் செய்ய உள்ளனர். இதற்காக 2181 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று காஷ்மீரில் இரண்டாவது கட்டமாக நடைபெறும் 18 தொகுதிகளில் 15 தொகுதிகள் காஷ்மீரிலும், 3 தொகுதிகள் ஜம்மு பிராந்தியத்திலும் அமைந்துள்ளன. தேர்தலை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி செயலில் ஈடுபடலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. மேலும் இரண்டாம் கட்ட தேர்தலில் முன்னாள் பிரிவினைவாத தலைவர் சஜ்ஜத் லோன், பிடிபி கட்சியின் சர்தாஜ் மத்னி, 4 அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் போட்டியிடுவதால் தேர்தலில் விறுவிறுப்பு அதிகரித்துள்ளது. இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.  சோபியானில் ஆளுங்கட்சி பஞ்சாயத்து தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டார். எல்லை பகுதிகளில் தீவிரவாதிகளுடன் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற சண்டையில் 10 பேர் கொல்லப்பட்டனர். இதனால் தேர்தல் பாதுகாப்பில் ராணுவம் மற்றும் துணை ராணுவ படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பதற்றம் நிறைந்த பகுதிகளாக கருதப்படும் காஷ்மீரில் கூடுதலாக 220 பட்டாலியன் கம்பெனி போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குசாவடிகளில் நீண்டவரிசையில் நின்று மக்கள் வாக்களித்தனர். ஜார்கண்டில் இரண்டாம் கட்டமாக 20 தொகுதிகளில் இன்று வாக்குபதிவு நடக்கிறது. இவற்றில் 16 தொகுதிகள் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட தொகுதிகளாகும். சட்டீஸ்கரில் நேற்று மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதலில் 14 மத்திய ரிசர்வ் படை போலீசார் கொல்லப்பட்டனர். இதனையடுத்து இந்த மாநிலத்தை ஒட்டியுள்ள மேற்கு வங்கம், ஒடிசா, ஜார்கண்ட் ஆகிய  எல்லை பகுதிகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. இன்று வாக்குப்பதிவு நடைபெறும் 20 தொகுதிகள் நக்சலைட் பாதிப்புள்ள மாவட்டங்களில் அமைந்துள்ளன. இப்பகுதிகளில் ஏற்கனவே நக்சலைட்டுகள் தேர்தலை புறக்கணிக்க அழைப்பு விடுத்துள்ளனர். தற்போது சட்டீஸ்கர் தாக்குதலை தொடர்ந்து ஜார்கண்டிலும் தேர்தலை சீர்குலைக்க மாவோயிஸ்ட்கள் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.

எனவே சுமார் 45 ஆயிரம் துணை ராணுவப் படையினர் ஜார்கண்டில் பாதுகாப்பு பணிக்காக களம் இறக்கப்பட்டுள்ளனர்.இன்றைய தேர்தலில் முன்னாள் முதல்வர்கள் மதுகோடா, அர்ஜூன் முண்டா மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பிம்லா பிரதான், துலால் புயான், ஜோபா மஞ்சி, அமைச்சர்கள் பன்னா குப்தா கீதாஸ்ரீ ஓரான், சம்பாய் சோரன் உள்ளிட்டோர் களத்தில் உள்ள முக்கிய வேட்பாளர்கள் ஆவர். ஜார்கண்டில் இரண்டாம் கட்ட தேர்தலில் 44 லட்சத்து 31 ஆயிரத்து 900 பேர் வாக்களிக்க உள்ளனர். இதற்காக 5048 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.நக்சல் பாதிப்பு உள்ள சிங்பும், செரய்கேலா, ராஞ்சி, கும்லா, சிம்தேகா, குந்தி உள்ளிட்ட மாவட்டங்களில் கூடுதல் படையினர் குவிக்கப்பட்டுள்னர். மாநில போலீசார் தவிர நக்சல் பாதிப்புள்ள மாவட்டங்களில் 260 மத்திய ரிசர்வ் படை பட்டாலியன்களும் குவிக்கப்பட்டுள்ளனர். பதற்றம் நிறைந்த பகுதிகளில் கூடுதல் போலீசார் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஜார்கண்டில் இன்று காலை 7 மணிக்கு வாக்குபதிவு தொடங்கியது. கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் காலையிலேயே மக்கள் வாக்களிக்க வரிசையாக வரத் தொடங்கினர். பதற்றமான வாக்குசாவடிகளில் மாலை 3 மணி வரையிலும் பிற வாக்குசாவடிகளில் 5 மணிவரையும் வாக்குபதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இரண்டாம் கட்ட தேர்தலை யொட்டி பிரதமர் மோடி தனது டுவிட்டரில் விடுத்துள்ள செய்தியில் ஜம்மு காஷ்மீர் மற்றும் ஜார்கண்டில் இன்று நடைபெறும் இரண்டாம் கட்ட தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் தங்களது வாக்குகளை பதிவு செய்ய வேண்டும். ஜனநாயகத்தை வெளிகாட்டும் வகையில் அதிகபட்ச வாக்குகள் பதிவாக வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment