Wednesday, December 17, 2014
பெஷாவர்::பாகிஸ்தான் பெஷாவர் நகரில் ராணுவம் நடத்தி வரும் பள்ளியில் தலிபான் தீவிரவாதிகள் புகுந்து கொலை வெறி தாக்குதல் நடத்தினர். இதில் குழந்தைகள், ஆசிரியர்கள் மற்றும் ராணுவத்தினர் என 160 பேர் பலியானார்கள்.
பெஷாவர் ராணுவ பள்ளிக்குள் தலிபான் தீவிரவாதிகளின் தற்கொலை படையினர் நேற்று காலை இந்திய நேரப்படி 10.30 மணிக்கு புகுந்தனர்.
அப்போது முதல் மாலை 6.30 மணி வரையிலான 8 மணி நேரம் நடந்த திக் திக் போராட்டம் பற்றிய விவரம்:–
காலை 10.30: பெஷாவர் ராணுவ பள்ளிக்குள் தலிபான் கோஷமிட்டப்படி தீவிரவாதிகள் புகுந்தனர். அவர்களை கண்டதும் பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர்.
11.00: தீவிரவாதிகள் பள்ளிக்குள் புகுந்த தகவல் பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் பள்ளி முன்பு குவிக்கப்பட்டனர்.
மதியம் 1.14: பெஷாவர் ராணுவ பள்ளி தீவிரவாதிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட தகவல் நகர் எங்கும் பரவியது. அதிகாரிகள் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனையில் இறங்கினர்.
1.17: பள்ளியில் இருந்து சில குழந்தைகள் அலறியடித்தப்படி வெளியே ஓடி வந்தனர். அவர்களை பத்திரமாக மீட்ட ராணுவத்தினரிடம் குழந்தைகள் பள்ளிக்குள் தீவிரவாதிகள் நடத்திய வெறியாட்டம் பற்றி அழுதபடி கூறினர். பள்ளி வளாகத்தில் 11 மாணவர்களும், ஒரு ஆசிரியரும் கொல்லப்பட்டதாக அவர்கள் கூறினர்.
1.25: பெஷாவர் ராணுவ பள்ளிக்குள் புகுந்ததும் அங்கு தாக்குதல் நடத்துவதற்கும் தெஹரிக்–இ–தலிபான் பாகிஸ்தான் என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பதாக அறிவிக்கப்பட்டது. அந்த அமைப்பின் பொறுப்பாளர் ஒருவர் பிறந்த குழந்தைகளையும், சிறுமிகளையும் கொல்ல மாட்டோம் என்றும் அறிவித்திருப்பதாக தகவல் வெளியானது.
1.32: ராணுவ பள்ளிக்குள் துப்பாக்கியால் சுடும் சத்தமும் குண்டுகள் வெடிக்கும் ஓசையும் கேட்டது. அதோடு அழுகுரலும், கூக்குரலும் அந்த பிராந்தியம் முழுவதும் எதிரொலித்தது.
1.34: தீவிரவாதிகள் பள்ளியில் இருந்த 17 குழந்தைகளை கொன்று விட்டதாக தகவல் பரவியது.
1.56: தலிபான் தாக்குதலை தடுக்க பாகிஸ்தானின் ராணுவ வீரர்கள் பள்ளிக்குள் புகுந்தனர்.
2.22: ராணுவத்தினரை எதிர்கொள்ள தலிபான் தீவிரவாதிகள் குழந்தைகளை கேடயமாக நிறுத்தியது தெரிய வந்தது. இதனால் ராணுவத்தினர் தாக்குதல் நடத்த உயர் அதிகாரிகளிடம் மாற்று யோசனை குறித்து கேட்டனர். இதற்குள் ஒரு ராணுவ வீரர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார்.
2.24: தீவிரவாதிகள் பிணை கைதிகளாக பிடித்து வைத்த குழந்தைகளில் 20 மாணவர்களையும் 3 ஆசிரியர்களையும் கொன்றனர்.
2.33: குழந்தைகளை கேடயமாக பயன்படுத்திய தீவிரவாதிகளை ராணுவத்தினர் மாற்று வழியில் எதிர்கொண்டு தாக்குதலில் ஈடுபட்டனர். பள்ளிக்குள் குண்டுகள் முழங்கும் சத்தம் பயங்கரமாக கேட்டது.
3.10: 84 குழந்தைகள் உள்பட 104 பேர் பலியாகி விட்டதாக தகவல் வெளியானது.
மாலை 4.26: பாகிஸ்தான் ராணுவத்தின் அதிரடிப்படை பள்ளி வளாகத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது. பள்ளியின் 4 முனைகளில் இருந்தும் தீவிரவாதிகளை குறி வைத்து ராணுவம் தாக்கியது.
6.30: 2 மணி நேரம் நடந்த தாக்குதலில் அனைத்து தீவிரவாதிகளும் கொல்லப்பட்டு விட்டதாக ராணுவம் அறிவித்தது.

No comments:
Post a Comment