Friday, December 12, 2014
ராமேசுவரம்::இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்ற தமிழக மீனவர்கள் 37 பேர் படகுகளுடன் விடுவிக்கப்பட்டனர்.
ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டு இருந்தபோது ராமேசுவரம் மீனவர்களின் 50 விசைப்படகுகளை அந்த வழியாக கடலில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர்.
அப்போது எடிசன் என்பவருக்குச் சொந்தமான படகு மீது இலங்கை கடற்படையினர் மோதினர். இதில் படகின் முன்பகுதி சேதம் அடைந்தது.
அதில் இருந்த பிரசன்னா (வயது 23), உலகநாதன் (24), பிரபு (25), பாக்சன் (21), நிசாந்த் (25), டோனிஸ்டன் (19) ஆகியோரை இலங்கை கடற்படையினர் படகுடன் கைது செய்து தலைமன்னார் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனர்.
இதேபோல மண்டபத்தில் இருந்து ஒரு படகில் மீன்பிடிக்க சென்ற 4 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து நெடுந்தீவு கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனர்.
மேலும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து சென்ற 6 படகுகளில் இருந்த 27 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்று காங்கேசன்துறை கடற்படை முகாமில் ஒப்படைத்தனர்.
37 மீனவர்களிடமும் சுமார் 8 மணி நேரம் இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தினர்.
அப்போது, “இனிமேல் எல்லை தாண்டி மீன்பிடிக்க வரக்கூடாது” என்று எச்சரித்து, நேற்று காலை 8.30 மணிக்கு படகுகளுடன் அவர்களை விடுவித்து அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து ராமேசுவரம், மண்டபம், ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 37 பேரும் தங்களுடைய 8 படகுகளில் கரை திரும்பினர்.
இதுகுறித்து நிரபராதி மீனவர்கள் விடுதலைக்கான கூட்டமைப்பு தலைவர் அருளானந்தம் கூறியதாவது:-
37 மீனவர்களையும், 8 படகுகளையும் விசாரித்து விடுவித்து விட்டதாக, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரி மூர்த்தி செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். இது மகிழ்ச்சி அளித்தாலும், இதேபோல இலங்கை சிறையில் உள்ள தமிழகத்தை சேர்ந்த 81 மீனவர்களையும் 83 மீன்பிடி படகுகளையும், இந்திய சிறையில் உள்ள இலங்கை மீனவர்கள் 30 பேரையும், 27 படகுகளையும் உடனே விடுதலை செய்ய இரு நாட்டு அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இலங்கை கடற்படை பிடித்துச் சென்ற போது தாக்குதல் நடத்தியதில் 6 மீனவர்கள் காயம் அடைந்தனர். அவர்களில் பிரசன்னா என்ற மீனவர் கூறியதாவது:-
க
ச்சத்தீவு அருகே மீன்பிடித்தபோது இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்து எங்கள் 6 பேரையும் கம்பால் தாக்கினர். சுமார் 1 மணி நேரம் எங்களை அவர்கள் துன்புறுத்தினர். பின்னர் தலைமன்னாருக்கு அழைத்து சென்றனர். நேற்று காலை கடுமையாக எச்சரிக்கை செய்து மீண்டும் இலங்கை கடல்பகுதிக்குள் வந்தால் விடுவிக்கமாட்டோம் என்று கூறி அனுப்பி வைத்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இலங்கை கடற்படை தாக்குதலில் ராமேசுவரத்தை சேர்ந்த 2 படகுகள் சேதம் அடைந்துள்ளன. காயம் அடைந்த 6 மீனவர்களும் ராமேசுவரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று திரும்பினர்.

No comments:
Post a Comment