Saturday, December 20, 2014

யாழ்ப்பாணத்தில் கடந்த 24 வருடங்களாக நலன்புரி முகாம்களில் வாழ்ந்து வரும் மக்களை விரைவில் மீளக்குடியமர்த்த நடவடிக்கை: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

Saturday, December 20, 2014
யாழ்ப்பாணத்தில் கடந்த 24 வருடங்களாக நலன்புரி முகாம்களில் வாழ்ந்து வரும் மக்களை விரைவில் மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
 
வடக்கில் இடம்பெயர்ந்தவர்களை மீளக் குடியமர்த்தும் செயற்திட்டத்தின் கீழ் இந்த மக்களையும் மீளக்குடியமர்த்த அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்ட போதும் அந்த மக்களின் தலைவர்கள் சிலரின் செயற்பாட்டினால் அம்முயற்சி பயனற்றுப் போனதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
 
அந்த தலைவர்கள் இதனை சர்வதேசப் பிரச்சினையாகக் காட்டி செயற்பட்ட போதும், இது சர்வதேசப் பிரச்சினையல்ல, இது ஒரு உள்நாட்டுப் பிரச்சினையே என்பதையும் ஜனாதிபதி தெளிவுபடு த்தினார். எமது உள்நாட்டுப் பிரச்சினையை சர்வதேச நாடுகள் தீர்க்க முடியாது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் தாம் வெற்றிபெற்று இந்தப் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண்பதாகவும் தெரிவித்தார்.
 
யாழ்ப்பாணத்தில் நலன்புரி முகாமில் வாழ்ந்து வரும் மக்களை நேரில் சந்தித்துக் கலந்துரையாடிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
 
1999 ஆம் ஆண்டிலிருந்து இந்த மக்கள் மீள் குடியமர்த்தப்படாமல் நலன்புரி முகாம்களிலேயே வாழ்ந்து வருகின்ற போதும், அந்த மக்களின் தலைவர்கள் இதில் தலையிட்டு இவர்களின் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதில் எந்தவித அக்கறையும் செலுத்தவில்லை.
 
மழைக்காலங்களில் சம்பந்தப்பட்ட நலன்புரி முகாம் நீரில் மூழ்கி பல்வேறு அசெளகரியங்களுக்கு உள்ளாகி வருவதாக அந்த மக்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர். உடனடியாக அதனைக் கவனத்தில் எடுத்த ஜனாதிபதி அந்த மக்களுக்கு அதற்குரிய வசதிகளை செய்து கொடுக்குமாறு வட மாகாண ஆளுனர் ஜீ. ஏ. சந்திரசிறிக்கு பணிப்புரை விடுத்தார். தாம் சொல்வதைச் செய்கின்ற தலைவர் என்றும் ஏனைய தலைவர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் இதன்போது ஜனாதிபதி குறிப்பிட்டார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உட்பட அரச அதிகாரிகளும் இதன்போது உடனிருந்தனர்.

No comments:

Post a Comment