Tuesday, November 11, 2014
இலங்கை::உச்ச நீதிமன்றின் சட்ட விளக்கம் குறித்து பாராளுமன்றில் இன்றைய தினம் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை::உச்ச நீதிமன்றின் சட்ட விளக்கம் குறித்து பாராளுமன்றில் இன்றைய தினம் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மூன்றாம் தவணைக்காக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியுமா? மற்றும் இரண்டாம் தவணைக்காக பதவிப் பிரமாணம் செய்து கொண்டு நான்கு ஆண்டுகள் பூர்த்தியானதன் பின்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்த முடியுமா ? ஆகிய இரண்டு கேள்விகள் தொடர்பில் உச்ச நீதிமன்றின் சட்ட விளக்கத்தை ஜனாதிபதி கோரியிருந்தார். கடந்த 5ம் திகதி ஜனாதிபதியினால் இந்த சட்ட விளக்கம் கோரப்பட்டிருந்தது.
பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தலைமையிலான பத்து நீதியரசர்கள் இந்த சட்ட விளக்கம் தொடர்பில் ஆராய்ந்து விளக்கமளித்துள்ளனர்.
ஜனாதிபதியினால் கோரப்பட்ட சட்ட விளக்கம் நேற்றைய தினமே, அலரி மாளிகைக்கு கிடைக்கப்பெற்றதாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உறுதி செய்துள்ளார்.
மிகவும் உசிதமான நேரத்தில் உசிதமான இடத்தில் சட்ட விளக்கத்தின் விதந்துரைகள் பற்றி பகிரங்கப்படுத்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பெரும்பாலும் அந்த உசிதமான இடம் பாராளுமன்றமாக இருக்கக் கூடும் என அவர் ஊகம் வெளியிட்டுள்ளார்.
உச்ச நீதிமன்றின் சட்ட விளக்கங்கள் குறிப்பாக அரசியல் சாசனம் தொடர்பிலான சட்ட விளக்கங்கள் பாராளுமன்றிற்கு அறிவிப்பதே மரபு என்ற போதிலும், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்கூட்டியே அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும், இன்றைய தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ போட்டியிட முடியுமா இல்லையா என்பது பற்றிய திட்ட வட்டமான தீர்மானத்தை அறிந்து கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தேர்தலில் போட்டியிட முடியும் என சட்ட விளக்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் என்பதே எதிர்க்கட்சிகள் மற்றும் அரசியல் ஆய்வாளர்களின் ஊகமாக அமைந்துள்ளது.

No comments:
Post a Comment