Monday, November 24, 2014
இலங்கை::ஏழாவது ஜனாதிபதித் தேர்தல் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 08ம் திகதி நடைபெறும்., அதற்கான வேட்பு மனுக்கள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 08ம் திகதி ஏற்றுக் கொள்ளப்படவுள்ளன.
இந்த அறிவிப்புக்கள் வெளியாகியிருக்கும் நிலையில், கட்சித் தாவல்கள் ஒன்றிரண்டு அரங்கேறியுள்ளன. தேர்தல் பரபரப்பில் இவையெல்லாம் நடந்தேறுவது சர்வ சாதாரணம். என்றாலும் மைத்திரிபால சிறிசேனவின் பொதுவேட்பாளர் அறிவிப்பு சற்று பேசு பொருளாக இருக்கின்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராகவும் அமைச்சராகவும் இருந்தவர் மைத்திரிபால சிறிசேன. பாரிய சதித் திட்டம் ஒன்றுக்கு இவர் துணை போய் இருக்கிறார். எதிர்க்கட்சிகளினால் பொது வேட் பாளர் ஒருவரை கண்டுபிடிக்க முடியாத நிலையில், மைத்திரியை வலை வீசிப் பிடித்திருக்கிறார்கள்.
எதிர்க்கட்சிகளின் அரசியல் வங்குரோத்து நிலை இதன்மூலம் நாட்டு மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டிருக்கிறது.
12 கட்சிகளின் மிகப் பெரிய கூட்டான ஐ.ம.சு.மு.வின் சார்பில் ஏகப் பிரதிநிதியாகப் போட்டியிடுபவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள். இவரோடு போட்டி போடக் கூடிய தகுதி ஐ.தே.க.வுக்குள் இருக்கும் எந்தவொரு உறுப்பினர்களுக்கும் இல்லை என்பதனையே நடந்தேறி யிருக்கும் சதித்திட்டம் காட்டுகிறது.
தான் ஒருபோதும் ஜனாதிபதியாக வரமுடியாது என்பது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நன்கு தெரியும். அதே நேரம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்துப் போட்டியிடும் துணிவும் தைரியமும் அவரிடம் கிடையவே கிடையாது. அதனாலேயே இதுவரை காலமும் பொது வேட்பாளரைத் தேடி வந்தனர். ஐ.தே.க வுக்குள் இருந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை எதிர்த்துப் போட்டியிடக் கூடிய வல்லமையும் துணிவும் எவருக்கும் இல்லை. இதனாலேயே பிறகட்சிகளிலிருந்து பொது வேட்பாளரை கடன் வாங்கும் நிலைக்கு ஐ.தே.க. தள்ளப்பட்டிருக்கிறது.
ஜனாதிபதியோடு போட்டி போடுவதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பின் வாங்கும் போது, நீண்ட கால அரசியல் ஈடுபாடுகொண்ட மைத்திரிபால சிறிசேன ஏன் பொது வேட்பாளர் என்ற களத்தில் போட்டியிட முன்வந்தார் என்பது மர்மமாகவே இருக்கிறது.
2005ம் ஆண்டு நடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் இதேபோன்றதொரு சதித் திட்டம் அரங்கேற்றப்பட்டது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் போட்டிபோட முடியாதென பின்வாங்கிய ரணில் விக்கிரமசிங்க, சரத்பொன் சேகாவை களத்தில் இறக்கினார். அவர் தோல்வி அடைந்ததும், இப்போது தனிமைப்பட்டு போய் இருப்பதும் நாம் நடைமுறையில் கண்ட அனுபவமாகும்.
இதே நிலைதான் மைத்திரிபால சிறிசேனவுக்கும் நடக்கப் போகின்ற தென்பதை நாம் முன்கூட்டியே ஊகித்தறியக் கூடியதாக இருக்கிறது.
எதிர்க்கட்சியின் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும் மைத்திரிபால சிறிசேனவுக்கு “ஐயோ பாவம்" எனக் கூறுவதைத் தவிர எம்மிடம் வேறு பதிலில்லை என ஐ.ம.சு.மு. பொதுச் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கடந்த வெள்ளியன்று கூறினார். ஸ்ரீல.சு.க.வின் வரலாற்றில் இது போன்ற பல்வேறு சதிகளும், துரோகங்களும் நடந்திருக்கின்றன.
சு.க.வின் ஸ்தாபகத் தலைவர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டார நாயக்க 1959ம் ஆண்டு பெளத்த மதகுரு ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு அந்தக் கட்சிக்குள்ளேயே சதித்திட்டம் தீட்டப்பட்டிருக்கிறதென்பது பின்னர் அம்பலத்துக்கு வந்தது. இதேபோல, கட்சிக்குள் பல்வேறு சூழ்ச்சிகளும் சதிகளும் நடந்திருக்கின்றன, என்றாலும், ஸ்ரீல.சு.கட்சி இன்னும் உறுதியான கொள்கையுடன் தனது மக்கள் பணியைத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. காலத்துக்குக் காலம் தமது கொள்கைகளை மாற்றிக் கொண்டு பதவிகளுக்கும் பணத்துக்கும் சோரம் போன பல அரசியல்வாதிகள் அரசியலில் காணாமலே போயுள்ளனர்.
இந்த நிலையே மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஏற்படும்.
உலக வரலாறுகளில் காட்டிக் கொடுப்புக்கள் பல்வேறு வடிவங்களில் நடந்திருக்கின்றன. இயேசு நாதருடன் இரவு உணவு உட்கொண்ட யூதாஸ் தான் 30 வெள்ளிக் காசுகளுக்காக காட்டிக் கொடுத்தான். இது வரலாறு. அதுபோலவே மைத்திரிபால சிறிசேனவும் ஜனாதிபதியையும், கட்சியை யும் காட்டிக் கொடுத்து விட்டார். முதல்நாள் இரவு அலரி மாளிகையில் ஜனாதிபதியுடன் முட்டை அப்பம் சாப்பிட்ட மைத்திரிபால சிறிசேன, கட்சி தாவப் போவது பற்றியோ தனது பிரச்சினைகள் குறித்தோ எதுவும் கூறாமல் காலையில் அடுத்த பக்கம் தாவி காட்டிக் கொடுத்துள்ளார். இப்படிப்பட்டவர் மக்களைப் பற்றியோ, நாட்டைப் பற்றியோ பேசுவதற்குத் தகுதியற்றவர்.
இதேபோல, ஸ்ரீமாவோ பண்டார நாயக்க காலத்திலும் பொலன்னறுவை மாவ ட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்திய சி.பி.டி. சில்வா என்பவர் அரசாங்க த்தை வீழ்த்த கடும் சதி செய்தார். அவரும் ஸ்ரீமாவோவுக்கு உண்ட வீட்டுக்கு இரண்டகஞ் செய்தார். இதைப் போன்றே பொலன்னறுவ மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மைத்திரியும் ரணில் விக்கிரமசிங்க, சந்திரிகா குமாரதுங்க ஆகியோரின் ஒத்துழைப்புடனும் சர்வதேச சதிகாரர் களுடனும் சேர்ந்து ஆட்சியைக் கவிழ்க்க துணைபோய் இருக்கிறார்.
இவைகளெல்லாம் புதிதான விடயம் அல்ல. ஆட்சியை மாற்ற சர்வதேச சதிகாரர்கள் முயன்றார்கள். முடியாத நிலையில் இப்படி டொலர்களுக்கு சோரம் போனவர்களை வைத்து முயற்சிக்கிறார்கள்.
எத்தகைய சவால்களையும் முறியடிப்பதுதான் ஆளுமையுள்ள தலைமையின் சிறப்பு. அந்த ஆளுமை கடந்த காலங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவே சதிவலைகளையெல்லாம் முறியடித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இம்முறையும் வெற்றுபெறுவது உறுதி. மக்கள் சக்தி என்றும் அவர் பக்கமே இருக்கிறது.

No comments:
Post a Comment