Thursday, November 20, 2014

தூக்குத் தண்டனையிலிருந்து தமிழக மீனவர்கள் விடுதலை: மத்திய, மாநில, இலங்கை அரசிற்கு மீனவ குடும்பங்கள் நன்றி!

Thursday, November 20, 2014
திருச்சி::தூக்கு தண்டனையை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேர் மீதான வழக்குகளை இலங்கை அதிபர் ராஜபக்சே ரத்து செய்தார். இதைதொடர்ந்து மீனவர்கள் 5 பேரும் நேற்று விடுதலை செய்யப்பட்டு இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் இன்று காலை தமிழகம் திரும்புகின்றனர்.
ராமநாதபுரம் மாவட் டம் தங்கச்சிமடம் மீனவர்கள் எமர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாத், லாங்லெட் ஆகியோரை போதைப்பொருள் கடத்தியதாக இலங்கை கடற்படை கைது செய்தது. அவர்கள் 5 பேருக்கும் கடந்த 30ம் தேதி தூக்கு தண்டனை விதித்து கொழும்பு உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய நவம்பர் 14ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. இதையொட்டி, கடந்த 11ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
 
இதற்கிடையே, இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன், பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். அப்போது 5 மீனவர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்யவும், மீனவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கவும் இலங்கை அதிபர் ராஜபக்சே ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியானது. மேல்முறையீட்டு வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால் மீனவர்களை விடுதலை செய்ய முடியாது. மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெற்றால்தான் பொதுமன்னிப்பு வழங்க வசதியாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
 
இந்நிலையில் கொழும்பு  ஐகோர்ட் நீதிபதிகள் விஜித் கே.மலால்கோடா, நவாஸ் ஆகியோர் கொண்ட அப்பீல் பெஞ்ச் முன்பு தமிழக மீனவர்கள் 5 பேர் சார்பில் ஆஜரான வக்கீல், அப்பீலை வாபஸ் பெறுவதற்கான மனுவை நேற்று தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து, தூக்கு தண்டனை எதிர்த்த அப்பீல் மனு வாபஸ் பெறப்பட்டதாக நேற்று காலை அதிகாரபூர்வ அறிவிப்பை இலங்கை அதிபர் மாளிகை வெளியிட்டது. இலங்கை அமைச்சர்கள் ஆறுமுக தொண்டைமான், செந்தில் தொண்டைமான் ஆகியோர் நேற்று காலை 9 மணி அளவில் அதிபர் ராஜபக்சேவை சந்தித்து 5 மீனவர்களை விடுதலை செய்வது பற்றி ஆலோசனை நடத்தினர்.
 
மேல்முறையீட்டு மனு வாபஸ் பெற்ற நிலையில், தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டாலும், ஏற்கனவே அவர்கள் மீது போதை பொருள் வழக்கு இருப்பதால் 5 மீனவர்களும் கைதிகளாகத்தான் தமிழகத்திடம் ஒப்படைக்கப்படுவார்கள். இதனால் தமிழகத்திலும் அவர்கள் சிறை யில் இருக்கும் நிலைதான் இருப்பதால் அந்த வழக்கை முழுவதுமாக வாபஸ் பெற்று மீனவர்கள் மீது எந்த வழக்கும் இன்றி முழுமையாக விடுதலை செய்யவேண்டும் என வலியுறுத்தினர். சுமார் ஒன்றரை மணி நேரம் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இதை ஏற்று இலங்கை அதிபர் ராஜபக்சே உடனடியாக 5 மீனவர்களையும் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
 
இதனையடுத்து 5 மீனவர்களும் நேற்று மாலை 4 மணியளவில் வெலிக்கடை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். உடனடியாக அனைவரும் கொழும் பில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். மீனவர்கள் விடுதலை குறித்து இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டமான் தினகரன் நிருபரிடம் கூறியதாவது: தமிழக மீனவர்கள் 5 பேரும் விடுதலை செய்யப்பட்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
 
முதலில் தூக்கு தண்டனையை ரத்து செய்ய இலங்கை அதிபர் ராஜபக்சே முடிவு செய்து அதற்கான உத்தரவை அளித்திருந்தார். தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டாலும், இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் 5 மீனவர்களும் இந்திய சிறையில் தான் இருக்க முடியும். இதுதொடர்பாக ஆலோசனை நடத்த மத்திய அமைச்சர் ஆறுமுக தொண்டமான் உள்ளிட்ட தலைவர்கள் அதிபர் ராஜபக்சேவை சந்தித்து ஆலோசனை நடத்தினோம். அப்போது 5 மீனவர்களின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டாலும் அவர்கள் மீண்டும் சிறை யில் இருக்கும் நிலை உள்ளது. எனவே அவர்களை முழுமையாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தினோம்.
 
இதனையடுத்து தனது நிலைப்பாட்டை இலங்கை அதிபர் ராஜபக்சே மாற்றிக்கொண்டு 5 மீனவர்கள் மீதான வழக்கையும் வாபஸ் பெற்று அவர்களை விடுதலை செய்ய உத்தரவிட்டார். இவ்வாறு செந்தில் தொண்டமான் கூறினார். 5 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டது ராமேஸ்வரம், புதுக் கோட்டை, நாகை, காரைக்கால் உள்ளிட்ட தமிழக மீனவர்கள் இடையே பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் 5 பேரும் தமிழகத் துக்கு இன்று திரும்புகிறார்கள். இன்று காலை 8.50 மணிக்கு திருச்சிக்கு விமானத்தில் வரும் அவர்கள் அங்கிருந்து சொந்த ஊருக்கு செல்கின்றனர்.
 
தமிழக மீனவர்கள் 5 பேரின் தூக்கு தண்டனை ரத்து செய்ய ஒத்துழைத்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் மத்திய, மாநில, இலங்கை அரசிற்கும் மீனவ குடும்பத்தினர் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
 

No comments:

Post a Comment