Tuesday, November 11, 2014

ஜனாதிபதித் தேர்தலில் அரசுத் தரப்பு வேட்பாளரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌சவை ஆதரிக்கும் நிலைப்பாட்டைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பரிசீலிக்கத் தயார்: இரா.சம்பந்தன்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அரசுத் தரப்பு வேட்பாளரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌சவை ஆதரிக்கும் நிலைப்பாட்டைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்க வேண்டும் என்று அரசுத் தரப்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையை ஆழமாகப் பரிசீலிக்கத் தயார் என அக்கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
 
தங்களை இதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரித்துச் செயற்படவில்லை என்றும், இம்முறையாவது தங்களை ஆதரிக்கத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வர வேண்டும் என்றும் அரசின் சிரேஷ்ட அமைச்சரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌சவின் ஆலோசகரும் அவரது சகோதரருமான பசில் ராஜபக்‌ச கோரிக்கை விடுத்தார் என்று கொழும்பில் வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
 
நாங்கள் இதுவரை அரசுடன் ஒத்துழைத்துச் செயற்பட முன்வரவில்லை என்று அரசுத் தரப்பில் கூறப்படுவது தவறானது.
எமது பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்காக அரசுடன் ஒத்துழைத்துச் செயற்பட நாம் எப்போதுமே தயாராக இருந்தே வந்துள்ளோம்.
 
இவற்றுக்கு மேல் நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல், அமைதித் தீர்வு காணுதல் போன்றவை தொடர்பிலும் அரசுடன் ஆக்கபூர்வமான ஈடுபாட்டை காட்டிச் செயற்பட நாம் எப்போதுமே தயாராக இருந்து வந்துள்ளோம்.
 
அதற்கான எமது தற்றுணிபை, பற்றுறுதியை, திடசங்கற்பத்தை  நாம் வெளிப்படுத்தியே வந்தோம்.அதற்காக இந்த அரசுடன் நீண்டகாலமாக பல சுற்றுக்கள் பேச்சுக்களையும் நடத்தினோம்.
ஆனால் அரசுதான் ஒரு தலைப்பட்சமாக அந்தப் பேச்சுக்களில் இருந்து விலகிக் கொண்டது.
 
எனவே இந்த அரசுடன் நாம் ஒத்துழைத்துச் செயற்படவில்லை என்று கூறுவது முற்றிலும் தவறானது.இப்போது ஜனாதிபதித் தேர்தலில் எமது ஒத்துழைப்பைக் கோருவது பற்றிய தகவலை ஊடகங்கள் மூலமாகவே நாம் அறிகிறோம்.
 
உத்தியோகபூர்வமாக அத்தகைய அழைப்பு ஏதும் எமக்கு விடுக்கப்படவில்லை.எனினும் அப்படி ஓர் அழைப்பு விடுக்கப்பட்டால் நாம் அதனை ஒரேயடியாக நிராகரித்து விடமாட்டோம்.
 
முதலில் தேர்தல் அறிவிக்கப்படட்டும். அதன் பின்னர் இத்தகைய அழைப்பு விடுக்கப்பட்டால் நாம் அதனை ஆழமாக பரிசீலிக்கத் தயாராக இருக்கிறோம்.நடுநிலை மனதுடன் அத்தகைய கோரிக்கையின் சாதக பாதகங்களை ஆராய்ந்து நாம் ஒரு தீர்க்கமாக முடிவை எடுப்போம் என்றார் இரா.சம்பந்தன்.

No comments:

Post a Comment