Monday, November 10, 2014

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தமிழக மீனவர்களுக்கு மரண தண்டனை: இலங்கையை கண்டித்து வக்கீல்கள் போராட்டம்!

 Monday, November 10, 2014
சென்னை::போதைப் பொருள் கடத்தல் வழக்கில், ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை ஐகோர்ட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு மரண தண்டனை விதித்தது.
 
இதை கண்டித்தும், இலங்கை நீதித்துறை இன வெறியோடு, தமிழர்களை பழிவாங்க வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு தீர்ப்பினை வழங்கியுள்ளது. இந்த தண்டனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும். தண்டனைப் பெற்ற மீனவர்களுக்கு பிற வகை உதவிகளை செய்யவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்கம், பெண் வக்கீல்கள் சங்கம், தமிழ்நாடு இளம் வழக்கறிஞர் மன்றம் ஆகிய அமைப்புகள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்கத்தின் தலைவர் கினி மானுவேல், செயலாளர் அறிவழகன் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட வக்கீல்கள் இலங்கையை கண்டித்து கோஷங்கள் போட்டனர்.
 
பின்னர், ஐகோர்ட்டு வளாகத்தில் ஊர்வலம் வந்து, ஒவ்வொரு கோர்ட்டு அறைகளுக்கும் சென்று கோஷங்களை போட்டனர். தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான முதன்மை டிவிஷன் பெஞ்ச் கோர்ட்டு அறைக்குள் வக்கீல்கள் கோஷம் போட்டபோது, அவர்களுக்கு தலைமை நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார்.
 
பின்னர், வக்கீல்கள் ஊர்வலமாக வந்து, ஐகோர்ட்டு நுழைவுவாயில் அருகே சாலையை மறித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அதேபோல், பெண்கள் வக்கீல் சங்கத் தலைவர் வி.நளினி தலைமையில், துணை தலைவர் ஆதிலட்சுமி லோகமூர்த்தி, செயலாளர் என்.எஸ்.ரேவதி, முன்னாள் தலைவர் டி.பிரசன்னா உட்பட ஏராளமான பெண் வக்கீல்கள் சென்னை ஐகோர்ட்டு ஆவின் பூத் அருகே ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது, இலங்கை அதிபர் ராஜபக் சேவையும், இலங்கை நீதித்துறையையும் கண்டித்து கோஷங்கள் போட்டனர். வக்கீல்கள் நடத்திய இந்த போராட்டத்தினால், ஐகோர்ட்டில் வழக்குகள் விசாரணை பாதிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment