Thursday, November 13, 2014

ஐரோப்பிய ஒன்றியத்தினால் பெரும் சர்ச்சைக் குள்ளாக்கப்பட்ட மீன்பிடி படகுகளை கண்காணிக்கும் கட்டமைப்பை உள்வாங்க ஒப்பந்தம் கைச்சாத்து!

Thursday, November 13, 2014
இலங்கை::ஐரோப்பிய ஒன்றியத்தினால் பெரும் சர்ச்சைக் குள்ளாக்கப்பட்ட மீன்பிடி படகுகளை கண்காணிக்கும் கட்டமைப்பான வி.எம்.எஸ். முறையை இலங்கை அரசாங்கம் நேற்று முதல் உள்வாங்கியுள்ளது.

இதற்கான ஒப்பந்தம் நேற்று மீன்பிடித்துறை மற்றும் நீரியல்வள அமைச்சில் கைச்சாத்தி டப்பட்டது. அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன, பிரதியமைச்சர் சரத்குமார திஸாநாயக்க, ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இலங்கைத் தூதுவர் மற்றும் வி.எம்.எஸ். நிறுவனப் பிரதிநிதிகள் முன்னிலையில் அமைச்சின் செயலாளர் டாக்டர் டி. திஸாநாயக்க மற்றும் வி.எம்.எஸ். பிரதிநிதி ஆகியோர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் தலைமையில் செய்தியாளர் மாநாடு நடத்தப்பட்டது. இதில் அமைச்சர் கருத்து தெரிவிக்கையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் செயற்பாடுகளை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. வேண்டுமானால் இவ்விடயம் தொடர்பில் இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்துடன் மோதியிருக்கலாம். ஆனால் நான் அதனை விரும்பவில்லை. அவ்வாறான மனோநிலை என்னிடம் இல்லாததன் காரணமாகவே நான் பொறுமையுடன் செயற்பட்டேன் எனவும் அவர் கூறினார்.

வி.எம்.எஸ். என்பது ஒரு தொழில்நுட்பம் இதனை சாதாரண மக்களால் இலகுவில் புரிந்து கொள்ள இயலாது. எமது அமைச்சில் இத்தொழில்நுட்பத்தை விளங்கிக் கொள்ளக்கூடிய நிபுணத்துவம் மற்றும் ஆங்கில மொழிவாண்மை பெற்ற அதிகாரிகள் இல்லாமையும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இலங்கை இராஜதந்திரிகளின் இழுத்தடிப்புமே இலங்கை அரசாங்கம் வி.எம்.எஸ். தொழில்நுட்பத்தை நடைமுறைப்படுத்துவதில் காலதாமதத்தை ஏற்படுத்திய தென்றும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

ஐரோப்பிய ஒன்றியம் 2012 ம் ஆண்டு முதலே வி.எம்.எஸ். தொழில்நுட்பம் குறித்து எமக்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தது. ஆனால் தான் 2010 ல் மீன்பிடித்துறையமைச்சராக பதவியேற்றது முதல் இக்கட்டமைப்பினை எமது மீன்பிடி படகுகளில் உள்வாங்க விரும்பினேன். அப்போது முதலே அதுகுறித்து உலக நாடுகளிலிருந்து தகவல் சேகரிக்கவும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவும் ஆரம்பித்தேன்.

அதற்கான நிகழ்ச்சி நிரல் இன்னமும் என்னிடம் உள்ளது. வி.எம்.எஸ்.
என்பது இலங்கை மீன்பிடி வரலாற்றுக்கு புதிதானதொரு தொழில் நுட்பம். ஆரம்பம் முதல் இலங்கை மீனவர்கள் ரேடியோ சமிக்ஞைகளையே உபயோகித்து வந்தனர். ரேடியோ சமிக்ஞைகள் மூலம் குறிப்பிட்ட துரத்தில் நடப்பவற்றை மாத்திரமே அறியக் கூடியதாக விருந்தது. எனவே எமது மீனவர்கள் வேறு நாடுகளில் கைது செய்யப்படுவதனை தடுக்க வேண்டுமாயின், எமக்கு வி.எம்.எஸ். அவசியம் என்பதனை நான் ஏற்கனவே அறிந்து வைத்திருந்தேன்.

இந்த சமுத்திரத்திற்கு பொருத்தமான செய்மதியினை தெரிவு செய்ய எனக்கு சில காலம் தேவைப்பட்டது. அதனைத் தொடர்ந்து தரமானதும் இலாபமானதுமான வி.எம்.எஸ். கருவிளை பெற்றுக் கொள்ள நாம் கேள்விப் பத்திரம் கோரியிருந்தோம். அவற்றை பரீசிலனைக்கு உட்படுத்தியபோது ‘விஸ்மா’ நிறுவனத்தின் தொழில்நுட்பத்தை எமது மீனவர்கள் முழு மனதுடன் ஏற்றுக் கொண்டனர். அதனைத் தொடர்ந்தே நாம் ஒப்பந்தம் கைச்சாத்திட தீர்மானித்தோம்.

நாம் ‘விஸ்மா’ வின் தொழில்நுட்பத்தை பெற்றுக் கொண்டதன் மூலம் இலங்கை அரசாங்கத்திற்கு 07 மில்லியன் இயுரோக்கள் இலாபம் கிடைத்துள்ளதெனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். ஐரோப்பிய ஒன்றியம், முதற்கட்டமாக 50 படகுகளுக்கு வி.எம்.எஸ். தொழில்நுட்பம் பொருத்தப்பட வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ள போதும், நாம் எம்மிடம் பதிவு செய்துள்ள 3 ஆயிரம் படகுகளுக்கும் இதனை பொருத்தவுள்ளோமெனவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment