Tuesday, November 18, 2014

தமிழக மீனவர்களின் தூக்கு தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை இந்தியா வாபஸ் பெற்றதாக தகவல்!

Tuesday, November 18, 2014
புதுடெல்லி::இலங்கையில் தமிழக மீனவர்கள் 5 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் இந்திய அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அருகே உள்ள தங்கச்சிமடத்தைச் சேர்ந்தவர்கள் எமர்சன் (வயது 35), அகஸ்டஸ் (35), வில்சன் (40), பிரசாத் (30), லாங்லெட் (22).மீனவர்களான இவர்கள், 2011–ம் ஆண்டு நவம்பர் 28–ந் தேதி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றபோது, இலங்கையில் ஹெராயின் போதைப்பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்டனர். இவர்களுடன் இலங்கை மீனவர்கள் மூவரும் பிடிபட்டனர்.

இவர்கள் மீதான வழக்கை கொழும்பு ஐகோர்ட்டு நீதிபதி பிரீதி பத்மன் சூரசேனா விசாரித்து, குற்றம்சாட்டப்பட்ட அனைவருக்கும் தூக்கு தண்டனை விதித்து கடந்த 30–ந்தேதி தீர்ப்பு அளித்தார். இந்த நிலையில், தமிழக மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை தீர்ப்புக்கு எதிராக இலங்கை அப்பீல் கோர்ட்டில் இந்திய தூதரகத்தின் சார்பில் கடந்த 11-ம் தேதி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனிடையே, மீனவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க தயாராக இருப்பதாக இலங்கை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பொதுமன்னிப்பை வழங்க ஏதுவாக தமிழக மீனவர்கள் தூக்கு தண்டனைக்கு எதிரான மேல் முறையீட்டு மனுவை இந்தியா வாபஸ் பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
மத்திய வெளியுறவுத்துறை மந்தரி சுஷ்மா சுவராஜ்-யை தமிழக மற்றும் புதுச்சேரி மாநில மீனவர்கள் பிரதிநிதிகள் சந்திப்பு!
 
புதுடெல்லி::மத்திய வெளியுறவுத்துறை மந்தரி சுஷ்மா சுவராஜ்-யை தமிழக மற்றும் புதுச்சேரி மாநில மீனவர்கள் பிரதிநிதிகள் இன்று புதுடெல்லியில் சந்தித்து பேசினார்கள்.

கட்சத்தீவு அருகே மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து வருகின்றனர். அத்துடன் அவர்கள் படகுகளையும் பறிமுதல் செய்கின்றனர். மத்திய அரசின் வற்புறுத்தல் பெயரில் மீனவர்கள் விடுவிக்கப்பட்டாலும் படகுகளை விடுவிப்பதில்லை.

இதுகுறித்து, அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனிடம் மீனவர்கள் கோரிக்கை வைத்தனர். அவர், மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ்-யை சந்தித்து பேசுவோம். அவர் நல்லமுறையில் தீர்வு காண உதவி செய்வார் என்று உறுதியளித்தார்.

அதன்படி இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 6 மாவட்ட பிரதிநிதிகள் இன்று சுஷ்மா சுவராஜ்-யை சந்தித்து பேசினர். அப்போது, தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்ட மீனவர்கள் விடுதலை செய்ய, இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். *இவர்களுடன் தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை மற்றும் இல கணேசனும் சென்றிருந்தனர்.

No comments:

Post a Comment