Sunday, November 23, 2014

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை இத்தடவையும் வெற்றி பெறச் செய்வதன் மூலமாக தமிழ் மக்களின் மட்டுமல்ல முழு நாட்டு மக்களதும் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றலாம்!

Sunday, November 23, 2014
இலங்கை::முடிந்தால் ஜனாதிபதித் தேர்தலை அல்லது பொதுத் தேர்தலை நடத்திப் பாருங்கள் என கடந்த ஆறு மாத காலமாகச் சவால் விட்டு வந்த எதிர்க்கட்சிகள் இப்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ களம் அமைத்துக் கொடுத்திருக்கிறார்.

ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவது உறுதியாகிவிட்டது. அதில் அடுத்த தடவையாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே போட்டியிடவும் உள்ளார். தேர்தலை நடத்த ஏற்பாடு செய்யுமாறு தேர்தல்கள் ஆணையாளருக்கு ஜனாதிபதியினால் அறிவுறுத்தலும் வழங்கப்பட்டு அதற்கான வர்த்தமானி அறிவித்தலும் நேற்று முன்தினம் வெளியாகி இப்போது தேர்தல் ஜனவரி மாதம் எட்டாம் திகதி இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தனை விடயங்களும் நடந்து முடிந்துள்ள நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக அவ்வப்போது அரசாங்கத்தைச் சீண்டிப் பார்க்கும் வகையில் தேர்தலை நடத்திப் பாருங்கள், யார் வெல்வது எனத் தெரியும் எனச் சவால் விட்டுவந்த எதிர்க்கட்சிகள் தமக்கிடையே ஒரு பொது வேட்பாளரைத் தெரிவு செய்வதிலேயே ஓர் உடன்பாட்டுக்கு வர முடியாதிருந்த நிலையில் சுதந்திரக் கட்சியிலிருந்தே ஒருவரைத் தமது பொது வேட்பாளராகத் தெரிவு செய்துள்ளது. பிரதான எதிர்க்கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க இத்தேர்தலில் போட்டியிடுவதை அக்கட்சியிலுள்ள பலரே எதிர்த்து வந்த நிலையில் இவர் தனது எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் தக்க வைக்கும் முகமாகத் தேர்தலில் போட்டியிட்டு மேலுமொரு தடவை தோற்றுப் போகாமலிருக்க இப்போது ஒருவரை பலிக்கடவாக்கியுள்ளார். அவரது தலைமையில் நடைபெற்ற இருபத்தெட்டுத் தேர்தல்களில் ஒன்றில்கூட அவரால் வெற்றிபெற முடியாதிருந்ததாக அக்கட்சியிலுள்ள பலரும் வெளிப்படையாகவே சுட்டிக் காட்டியுள்ளனர்.

இந்நிலையில் தனித்துப் போட்டியிட்டு நிச்சயம் கணிசமான வாக்குகளைக் கூடப் பெற முடியாது என்பதால் தமது மானத்தைக் காப்பாற்றுவதற்காக எதிரணியிலுள்ள சிறுசிறு கட்சிகளைக் கூட்டுச் சேர்த்து ஒரு பொது வேட்பாளரை தெரிவு செய்ய ஐக்கிய தேசியக் கட்சி முனைந்தாலும் அதிலும் ஒரு முடிவிற்கு வர முடியாது போனமையால் இப்போது முன்னாள் அமைச்சர் மைத்திரிபால சிரிசேனவைத் தமது பொதுவேட்பாளராக களமிறக்கியுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சிக்குள் காணப்படும் சிக்கல், வெளியே கூட்டு வைக்கும் சிறு சிறு கட்சிகளின் தொல்லைகள் எனப் பலவற்றுக்கும் முகங்கொடுக்க வேண்டிய நிலைக்கு அக்கட்சி தள்ளப்பட்டுள்ளது. இதனால் தமக்கிருக்கும் சிறிதளவான ஆதரவாளர்களையும் அக்கட்சி இழந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால் ஆளுங்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அதன் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வழிநடத்தலில் அதன் அனைத்துப் பாங்காளிக் கட்சிகளினதும் ஒற்றுமையுடன் நிதானமான முடிவுகளை எடுத்து வருகின்றது. சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்படுவதற்கு தாமாகவே பதினான்கு கட்சிகள் முன்வந்துள்ளன. இவை அனைத்திற்கும் உரிய அந்தஸ்து வழங்கி சுதந்திரக் கட்சி தனது அடுத்த வெற்றிப் பயணத்தை இத்தேர்தல் மூலம் தொடரவுள்ளது.

சுதந்திரக் கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக மூன்றாவது தடவையாகவும் இம்முறை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடுவதை பங்காளிக் கட்சிகள் அனைத்துமே ஒருமனதுடன் ஏற்றுக் கொண்டுள்ளன. இது ஜனாதிபதியின் வெற்றியை இப்போதே உறுதி செய்து விட்டது போலாகிவிட்டது. சுதந்திரக் கட்சியிலிருந்து ஒருசிலர் பிரிந்து செல்வதால் அக்கட்சி பலவீனமடைந்துவிடும் எனச் சிலர் மனப்பால் குடித்து வருகின்றனர். அது ஒருபோதும் இடம்பெறாது. சலூன் கடைக் கதவு போல தமது கட்சியிலிருந்து எவரும் செல்லலாம் அதேபோன்று எவரும் வந்து இணைந்து கொள்ளலாம் என ஜனாதிபதி அன்றே தெரிவித்திருந்தார். அதனைச் சிலர் இன்று செய்து வருகின்றனர்.

நடைபெறவுள்ள தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தமிழ், முஸ்லிம் கட்சிகள் ஆதரிக்கத் தீர்மானித்துள்ளன. குறிப்பாக மலையகக் கட்சிகள் அனைத்துமே ஜனாதிபதிக்கான தமது ஆதரவை அவரைச் சந்தித்து வெளிப்படையாகவே தெரிவித்து விட்டன. மலையகத்தில் பிரதான கட்சிகளாக இருக்கும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, பிரதியமைச்சர் பிரபா கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் காங்கிரஸ் மற்றும் பிரதியமைச்சர் பி.திகாம்பரம் தலைமையிலான கட்சி உட்பட தொழிற் சங்கங்கள் பலவும் ஜனாதிபதியை ஆதரிக்கும் தீர்மானத்தை எடுத்துவிட்டன.

அதேபோன்று முஸ்லிம் கட்சிகளில் பிரதான கட்சிகளாக இருக்கும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான மக்கள் காங்கிரஸ் எனச் சகல கட்சிகளுமே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையே ஆதரிக்கவுள்ளன. இவற்றில் சில கட்சிகள் தமது முடிவுகளை அறிவிக்காதிருப்பினும் ஏற்கனவே ஆளுங்கூட்டணியில் பங்காளிகளாக இருப்பதன் காரணமாகவும், ஜனாதிபதியின் தமது மக்களுக்கான மற்றும் முழு நாட்டிற்குமான சேவை காரணமாகவும் தமது ஆதரவை அவருக்கே நிச்சயம் வழங்கவுள்ளன.

அத்துடன் முழு நாட்டிலுமுள்ள முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி தலைமையிலான இந்த அரசாங்கத்தினது சேவை தொடர்வதையே விரும்புவதன் காரணமாக பிரதான கட்சிகளான இவற்றால் தமது மக்களின் விருப்பிற்கு மாறாகச் செயற்பட முடியாத ஒரு சூழல் உருவாகியுள்ளது.

இதேவேளை இம்முறை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு கிழக்கு மற்றும் தலைநகரில் வாழ்கின்ற தமிழ் மக்களில் பெரும்பாலானோர் தமது ஆதரவை ஜனாதிபதிக்கே வழங்கவுள்ளனர். அண்மைக் காலமாக ஜனாதிபதியைச் சந்தித்துரையாடிவரும் தமிழ் புத்திஜீவிகள் அடங்கிய குழுக்கள் மற்றும் கல்வியாளர்கள், தொழில்துறைசார் நிபுணர்கள் பலரும் வெளிப்படையாகவே தெரிவித்திருக்கும் கருத்துக்கள் அவர்கள் மட்டுமல்ல தமிழ் மக்களது மனங்களிலுள்ள பிரதிபலிப்பை நன்கு எடுத்துக் காட்டுகிறது. இப்போது வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களோ அல்லது புலத்திலிருக்கும் வடபகுதி தமிழ் மக்களோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்துக்களுக்கு செவிசாய்ப்பதாக இல்லை.

அம்மக்கள் தமது பிரச்சினைக்கு ஒரு நல்ல தீர்வினைக் கண்டு நிம்மதியாக வாழ்வதையே விரும்புகிறார்கள். தம்மை வைத்து தமிழ்க் கூட்டமைப்பின் சில தலைவர்கள் அரசியல் நடத்துவதை அவர்கள் இனியும் ஏற்கத் தயாராக இல்லை. இதனை அம்மக்களின் அரசியல் கலப்பில்லாத தலைமைத்துவத்தின் கருத்துக்களிலிருந்து தெரிந்து கொள்ள முடிகின்றது. இதனை இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் உணர்ந்துள்ளனர். தம்மை விட்டுத் தமிழ் மக்கள் விலகிச் சென்று விடுவார்களோ எனும் பயம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் ஏற்பட்டுள்ளது.

அதனாலேயே இதுவரை காலமும் தமது ஆதரவு எதிரணியில் போட்டியிடும் பொது வேட்பாளருக்கே என அறிவிப்புச் செய்தவர்கள் இன்று தமது நிலைப்பாட்டை மாற்றி தமிழ் மக்களுக்கான பிரச்சினைகளை எவர் தீர்த்து வைக்கிறாரோ அவருக்கே தமது ஆதரவு என ஜனாதிபதியை ஆதரிக்கும் வகையில் மறைமுகமாக அறிக்கையை விடுகின்றனர். ஒருவகை பயம் அவர்களை ஆட்கொணரத் தொடங்கியுள்ளது. இது உண்மையிலேயே தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் ஒரு சிறந்த ஆரம்பம் என்றே கூற வேண்டும்.

இம்முடிவினை தமிழ்க் கூட்டமைப்பினர் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பாக அதாவது யுத்தம் நிறைவிற்கு வந்த காலத்தில் எடுத்திருந்தால் மேலும் பல உலக நாடுகளின் உதவிகளுடன் நாடு மேலும் வளர்ச்சி கண்டிருக்கும். எது எவ்வாறிருப்பினும் அவர்களது இம்முடிவினை சகல தமிழ் மக்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும். தமிழ் மக்களின் பிரச்சினைகளை தமிழ்க் கூட்டமைப்பின் ஒத்துழைப்புடன் தீர்த்து வைக்கக்கூடிய ஒரேயொரு தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே என்பதை தமிழ்க் கூட்டமைப்பு காலந்தாழ்த்தியேனும் உணர்ந்திருப்பது உண்மையிலேயே பாராட்ட வேண்டும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை இத்தடவையும் வெற்றி பெறச் செய்வதன் மூலமாக தமிழ் மக்களின் மட்டுமல்ல முழு நாட்டு மக்களதும் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றலாம்.

No comments:

Post a Comment