Thursday, November 06, 2014
புதுடெல்லி::பிரதமர் நரேந்திர மோடிக்கு பாகிஸ்தானில் இயங்கும் தலிபான் தீவிரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
காஷ்மீர்
மற்றும் குஜராத் மாநிலத்தில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதற்கு பழிக்கு பழி
வாங்க உங்கள் (மோடி) மீது தாக்குதல் நடத்துவோம்’’ என்று தலிபான்
தீவிரவாதிகளின் செய்தித் தொடர்பாளர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள தகவலில்
கூறியுள்ளான். மோடி பிரதமராக பதவி ஏற்ற பிறகு பாகிஸ்தான் தீவிரவாதிகள்
வெளியிட்டுள்ள முதல் மிரட்டல் இதுவாகும்.
வழக்கமாக தீவிரவாதிகளின்
இத்தகைய மிரட்டல்களுக்கு பாதுகாப்புப் படையினர் மிகவும் முக்கியத்துவம்
கொடுக்க மாட்டார்கள். ஆனால் பாகிஸ்தான் தலிபான் தீவிரவாதிகளின்
அச்சுறுத்தலை பிரதமர் மோடியின் பாதுகாப்புப் பிரிவினர் ஒரு சவாலாக
எடுத்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியின்
பாதுகாப்பு முழுமையாக மாற்றப்பட்டுள்ளது. பிரதமர் மோடி டெல்லி நகருக்குள்
பயணம் செய்யும் போதும், டெல்லியை விட்டு மற்ற மாநிலங்களுக்கு செல்லும்
போதும் எத்தகைய பாதுகாப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று புதிய வழிகாட்டிகள்
தயார் செய்யப்பட்டுள்ளன.
புதிய திட்டத்தின்படி பிரதமர் மோடியை
அவ்வளவு எளிதில் யாரும் நெருங்க முடியாதபடி 6 அடுக்கு பாதுகாப்புக்கு
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி நாளை தன் சொந்த தொகுதியான
வாரணாசிக்கு செல்கிறார். 7, 8–ந்தேதிகளில் அவர் வாரணாசி தொகுதியில்
சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
இந்த
மாத இறுதியில் காஷ்மீர், ஜார்க்கண்ட் மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து
தேர்தல் பிரசாரம் செய்ய மோடி திட்டமிட்டுள்ளார். சுமார் 20
பொதுக்கூட்டங்களில் அவர் பிரசாரம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த
சுற்றுப்பயணங்களின் போது பிரதமர் மோடிக்கு 6 அடுக்கு பாதுகாப்பு
வழங்கப்படும்.
இது தவிர பிரதமர் மோடியின் ரேஸ் கோர்ஸ் வீடு மற்றும்
சவுத் பிளாக்கில் உள்ள அலுவலகம் இரண்டிலும் மத்திய ரிசர்வ் போலீசாரும்
டெல்லி போலீசாரும் இணைந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தீவிரவாதிகளின் அச்சுறுத்தலைத் தொடர்ந்து இந்த இரு இடங்களிலும் கூடுதல்
கமாண்டோ படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
பிரதமர் மோடியின்
பாதுகாப்பு வளையத்தில் செயல்படும் கமாண்டோ படை வீரர்கள் அனைவரும் முழுமையாக
விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


No comments:
Post a Comment