Monday, November 10, 2014
சென்னை::போதைப்பொருள் கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், 5 மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை எதிர்த்து அங்குள்ள சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த எமர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாத் மற்றும் லேங்க்லெட் என்ற 5 மீனவர்கள் கடந்த 28-ஆம் தேதி அன்று மீன்பிடித்து கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்கள் மீது போதைப்பொருள் கடத்தியதாக இலங்கை அரசால் வழக்கு தொடரப்பட்டது. தமிழக அரசின் நிதியுதவியுடன், 5 மீனவர்களை ஜாமீனில் விடுதலை செய்ய 21.3.2012 அன்று யாழ்ப்பாணம் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் 11.6.2012 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பில் மீனவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு, அவர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் கொழும்பு ஐகோர்ட் கடந்த 30-ஆம் தேதி 5 மீனவர்களுக்கும் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது. இந்த தண்டனையை கண்டித்தும், அவர்களை காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தமிழகத்தில் 13 கடலோர மாவட்ட மீனவர்கள் வேலை நிறுத்தம் உள்பட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 5 பேரும் மேல்முறையீடு செய்யும் வகையில் உரிய சட்ட உதவிகளை வழங்க இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்திற்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, 5 மீனவர்களை விடுதலை செய்ய இன்று இலங்கை சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வதற்கான நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேல்முறையீடு வழக்கில் இலங்கை சுப்ரீம்கோர்ட்டில் 5 மீனவர்கள் சார்பில் ஆஜராக இலங்கையில் உள்ள மிகச்சிறந்த சட்ட வல்லுநர்களை இந்திய தூதரகம் நியமித்துள்ளது. இதற்கான வழக்கு செல்வினமாக ரூ.20 லட்சத்துக்கு தமிழக அரசு நேற்று முன்தினம் அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment