Thursday, November 20, 2014
சுவா: மியான்மர், ஆஸ்திரேலியா பயணத்தை முடித்துக் கொண்டு பிஜி தீவுக்கு பிரதமர் மோடி நேற்று சென்றார். பிஜி மற்றும் பசிபிக் நாடுகளுக்கு கடனுதவி திட்டங்களை அறிவித்த பிரதமர் நேற்று தனது 10 நாள் வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு தாய்நாடு புறப்பட்டார். மியான்மரில் நடந்த ஆசியான் மாநாடு, ஆஸ்திரேலியாவில் நடந்த ஜி20 மாநாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி நேற்று பிஜி தீவுக்கு சென்றார். சுவா சர்வதேச விமான நிலையத்தில் மோடியை, பிஜி நாட்டு பிரதமர் பிராங் பைனிமராமா மற்றும் பசிபிக் தீவுகளின் பிரதிநிதிகள் வரவேற்றனர். பிரதமர் அலுவலகம் மற்றும் நாடாளுமன்றம் அருகேயுள்ள அல்பர்ட் பூங்காவில், பிஜி பாரம்பரிய முறைப்படி மோடிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய மோடி, ‘‘இந்தியாபிஜி இடையேயான உறவில் புதிய தொடக்கத்தை ஏற்படுத்தும் புதிய நாள் இது. பசிபிக் பகுதியில் இந்தியாவின் மையமாக பிஜி செயல்பட முடியும். எதிர்காலத்தில் இரு நாடுகளும் சிறந்த கூட்டாளிகளாக இருப்பதற்கான அடித்தளத்தை அமைக்கவும், நமது உறவுகளை புதுப்பிக்கவும் எனது இந்த பயணத்தை நல்ல வாய்ப்பாக கருதுகிறேன். செவ்வாய் கிரகத்துக்கு இந்தியா மங்கள்யான் விண்கலத்தை அனுப்பியபோது, இந்திய விஞ்ஞானிகள் 18 பேர், பிஜியில் தங்கியிருந்து கண்காணித்தனர். அதற்காக பிஜிக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இருநாடுகளும் இணைந்து வரலாறு படைத்தன.’’ என்றார்.
இதையடுத்து, பிஜி நாடாளுமன்றத்தில் பேசிய மோடி, ‘‘பிஜியை இந்தியாவின் முக்கிய நட்பு நாடாக கருதுகிறேன். வரலாற்று மற்றும் பண்பாட்டில் இரு நாடுகள் இடையே ஆழமான உறவு உள்ளது. பசிபிக் பகுதியில் பிஜி முக்கியமான வளரும் நாடு. பிஜியை, ‘டிஜிட்டல் பிஜியாக’ உருவாக்க இந்தியா தயாராக உள்ளது. பிஜியில் மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்காக ரூ.432 கோடி கடனுதவி வழங்கப்படும். சிறு, குறு தொழிற்சாலைகளின் வளர்ச்சிக்காக ரூ.30 கோடி நிதியுதவி அளிக்கப்படும். பிஜி உட்பட 14 பசிபிக் தீவு நாடுகளின் மக்களுக்கு, இந்திய வருகையின் போது உடனடியாக விசா வழங்கப்படும். இந்தியாவில் படிக்கும் மற்றும் பயிற்சி பெறும் பிஜி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை இரட்டிப்பாக்கப்படும்.
பசிபிக் தீவு நாடுகளில் தொலைதூர கல்வி மற்றும் மருத்துவ திட்டத்துக்கு ரூ.6 கோடி நிதியுதவி அளிக்கப்படும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். பிஜி தீவுக்கு கடந்த 1981ம் ஆண்டில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சென்றார். 33 ஆண்டுகளுக்கு பின் பிஜி சென்ற இந்திய பிரதமர் மற்றும் பிஜி நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முதல் வெளிநாட்டு பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார். தனது 10 நாள் வெளிநாட்டு பயணத்தை பிஜியில் முடித்த பிரதமர் மோடி நேற்று தாய்நாடு புறப்பட்டார். இன்று காலை அவர் டெல்லி வந்தடைகிறார்.



No comments:
Post a Comment