Thursday, November 06, 2014
நாகப்பட்டினம்::இலங்கையில் தமிழக மீனவர்கள் 5 பேருக்கு தூக்கு தண்டனை
விதிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் இன்று மீனவர்கள்
வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குமரி மாவட்டத்தில்
ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள 42 மீனவ கிராமங்களிலும் உள்ள
மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
குளச்சல்
பகுதியில் இருந்து தினமும் 300 விசைப்படகுகள் நூற்றுக்கணக்கான
கட்டுமரங்கள், வள்ளங்கள், பைபர் படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்று
வருகிறார்கள்.
இன்று அவர்கள் யாரும் மீன் பிடிக்க செல்லவில்லை.
இதனால் கட்டுமரங்கள் கடற்கரை ஓரங்களில் நிறுத்தப்பட்டிருந்தது.
விசைப்படகுகள் கடலில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டு இருந்தது.
மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாததால் குளச்சல் துறைமுகம் வெறிச்சோடி
காணப்பட்டது.
கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் துறைமுகத்தில்
இருந்தும் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் சின்னமுட்டம்
துறைமுகமும் வெறிச்சோடி இருந்தது. கன்னியாகுமரி, கோவளம், மணக்குடி,
ராஜாக்கமங்கலம், குளச்சல், கொட்டில்பாடு, சைமன் காலனி, குறும்பனை,
மண்டைக்காடு, மணவாளக்குறிச்சி, இரயுமன்துறை, ராமன்துறை, வள்ளவிளை, பூத்துறை
பகுதிகளில் உள்ள கடற்கரைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
தமிழ்நாடு
மீனவர் பேரவை மகளிர் மாநில தலைவர் லீமாரோஸ், தெற்காசிய மீனவர்
கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சர்ச்சில், உள்நாட்டு மீனவர் கூட்டமைப்பு
ஒருங்கிணைப்பாளர் பிரான்சிஸ் உள்பட மீனவ பிரதிநிதிகள் நாகர்கோவில் கலெக்டர்
அலுவலகத்தில் கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்று அளித்தனர். அதில்,
அவர்கள் கூறி இருப்பதாவது:–
இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு கடும்
கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட அப்பாவி
மீனவர்கள் 5 பேரையும் விடுவிக்க மத்திய அரசு உயர்மட்ட குழு ஒன்று அமைத்து
உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறி
இருந்தனர். இந்த மனுவை முதல்–அமைச்சர், பிரதமருக்கும் அனுப்பி வைத்தனர்.
மனு கொடுக்க வந்த மீனவ பிரதிநிதிகள் கறுப்புச் சட்டை அணிந்து தங்களது
எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.
குளச்சல் மீன் துறை அலுவலகம் முன்பு
கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு குமரி மாவட்ட மீன்பிடி
தொழிலாளர் தலைவர் ஆன்றோ லெனின் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில்
மீனவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி கோஷங்களை எழுப்பினார்கள்.
மீனவர்களை விடுதலை செய்யக்கோரி நாகை–காரைக்கால் மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம்!
தமிழக மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை நீதிமன்றம் தூக்கு தண்டனை
விதித்துள்ளது. அவர்கள் போதைப்பொருள் கடத்தியதாக குற்றம் சாட்டி இந்த
தண்டனையை அறிவித்துள்ளது. இதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு
கிளம்பி உள்ளது. தமிழக மீனவர்களுக்கு
தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறி தமிழக மீனவர்கள் தொடர் போராட்டம்
நடத்தி வருகின்றனர்.
நாகை மாவட்டத்தில் இன்று 5–வது நாளாக மீனவர்கள்
மீன்பிடிக்க செல்லவில்லை. நாகை மற்றும் காரைக்காலை சேர்ந்த 1 லட்சம்
மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாததால் அவர்களுக்கு தினமும் ரூ.2 கோடி வருமான
இழப்பு ஏற்படுகிறது. 3 ஆயிரம் விசைப்படகுகளும், 7 ஆயிரம் பைபர் படகுகளும்
கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.
தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 5
மீனவர்களையும் 5–ந்தேதிக்குள் விடுதலை செய்யாவிட்டால் இன்று முதல்
காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாக 5 மாவட்ட மீனவர் சங்க
பிரதிநிதி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று
முதல் மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாகையில்
தலைமை தபால் நிலையம் முன்பு மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை
இன்று தொடங்கினர். இந்த போராட்டத்தில் நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம்,
கீச்சாங்குப்பம், நம்பியார்நகர், நாகூர், பட்டினச்சேரி, செருதூர்,
வேளாங்கண்ணி, வேதாரண்யம், தரங்கம்பாடி, சீர்காழி உள்பட 54 மீனவ கிராமங்களை
சேர்ந்த மீனவர்களும், காரைக்கால் மாவட்டம் காரைக்கால்மேடு, கிளிஞ்சன்மேடு
உள்பட 11 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்களும் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment