Friday, November 14, 2014
வேதாரண்யம்::இலங்கையில் இருந்து வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரை வழியாக தங்கம் கடத்தல் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.
கடலோர காவல் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டாலும், தங்கம் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கிறது.இந்நிலையில், நேற்று நள்ளிரவு கோடியக்கரை வழியாக சென்னைக்கு பெருமளவு தங்கம் கடத்தி செல்லப்படுவதாக சுங்கத் துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதையடுத்து அதிகாரிகள் தீவிர வாகனை சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, வேதாரண்யம் அருகே வந்த ஒரு காரை வழிமறித்து சோதனை நடத்தப்பட்டது. அதில் 15 கிலோ தங்கம் பிடிபட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றை கடத்தி வந்தவர்களை சுங்கத் துறை அலுவலகத்தில் வைத்து விசாரித்து வருவதாகவும் தெரிகிறது.
இலங்கையில் இருந்து மொத்தம் 150 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டதாகவும், அவற்றை பல்வேறு குழுக்களை சேர்ந்தவர்கள் கடத்திச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் தமிழகம் முழுவதும் உள்ள சோதனை சாவடிகளில் தீவிர வாகன சோதனை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், தங்கம் பிடிபட்டதை அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை.

No comments:
Post a Comment