Sunday, November 30, 2014

வாளால் வெட்டியும், வெடிபொருட்களை வீசியும் சீனாவில் தீவிரவாதிகள் தாக்குதல் 15 பேர் பலி: 14 பேர் படுகாயம்!

Sunday, November 30, 2014
பீஜிங்: சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் பொது இடத்தில் புகுந்த தீவிரவாதிகள் வாளால் வெட்டியும், வெடிபொருட்களை வீசியும் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில், பொதுமக்களில் 4 பேர் பலியாயினர். 14 பேர் படுகாயமடைந்தனர். போலீசார் பதில் தாக்குதல் நடத்தி 11 தீவிரவாதிகளையும் கொன்றனர்.
 
சீனாவின் ஜின்ஜியாங் மாகாணம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், ஆப்கானிஸ்தானை ஒட்டி அமைந்துள்ளது. இந்த மாகாணத்தை பிரித்து தனி நாடாக அறிவிக்க கோரி, உய்குர் பிரிவினர், கிழக்கு துருக்கிஸ்தான் தீவிரவாத அமைப்பை நடத்தி வருகின்றனர். அல்கொய்தாவுடன் தொடர்பு கொண்ட இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் சமீபகாலமாக சீனாவில் பயங்கரவாதத்தை அரங்கேற்றி வருகின்றனர்.
 
கடந்த ஜூலை மாதம் சாசே நகரில் புகுந்த தீவிரவாதிகள் வாள் மற்றும் கோடாரியால் சரமாரியாக வெட்டியதில் 37 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதில் பிடிபட்ட 27 தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை விதித்து உள்ளூர் நீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பளித்தது.இந்நிலையில், நேற்று உள்ளூர் நேரப்படி மதியம் 1.30 மணிக்கு சாசே கவுன்டி நகரத்தின் பரபரப்பான பகுதியில் இரு சக்கர வாகனத்தில் வந்த தீவிரவாதிகள், வாள் மற்றும் வெடிபொருட்களை கொண்டு தாக்குதல் நடத்தினர்.
 
 இதில் பொதுமக்களில் 4 பேர் பலியாயினர். 14 பேர் படுகாயமடைந்தனர். போலீசார் விரைந்து வந்து, பதில் தாக்குதல் நடத்தி 11 தீவிரவாதிகளையும் கொன்றதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனமான ஜின்ஹூவா தகவல் வெளியிட்டுள்ளது.சம்பவம் நடந்த பகுதியில் ஏராளமான வெடிபொருட்களும், வாள்களும், கோடாரிகளும் மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment