Thursday, October 2, 2014

தில்லி காவல் நிலையத்தில் பிரதமர் மோடி அதிரடி ஆய்வு!


Thursday, October 02, 2014
புதுதில்லி::அரசு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களை சுத்தப்படுத்தும் விதமாக, ‘தூய்மை இந்தியா’ என்கிற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் (ஆகஸ்ட்) 15–ந் தேதி அறிவித்தார்.

மேலும் இந்த திட்டம் காந்தி ஜெயந்தி அன்று தொடங்கப்படும் என்றும் வரும் 4 ஆண்டுகளுக்கு இது அமலில் இருக்கும் என்றும் சுதந்திர தின உரையில் கூறியிருந்தார். அதன்படி, 'தூய்மை இந்தியா' திட்டத்தை பிரதமர் மோடி இன்று தில்லியில் தொடங்கி வைத்தார். இதன் பின்னர், நாடு முழுவதும் உள்ள 31 லட்சம் அரசு ஊழியர்களும், தூய்மைப் பணியை மேற்கொள்வதற்கான உறுதிமொழியை ஏற்றனர். நாடு முழுவதும் உள்ள 4,041 நகரங்களில் மொத்தம் ரூ. 2 லட்சம் கோடி செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

முன்னதாக இந்த திட்டத்தை துவக்கி வைக்க வால்மீகி காலனி நோக்கி பிரதமர் மோடி காரில் சென்ற போது திடீரென காரை நிறுத்த சொல்லி மந்திர் மார்க் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் அதிரடி ஆய்வு மேற்கொண்டார். மோடியின் இந்த வருகையை சிறிது எதிர்பார்க்காத அதிகாரிகள் அனைவரும் ஆச்சர்யமடைந்தனர். பின்னர் மோடி காவல் நிலையத்தில் சிறிது நேரம் செலவழித்ததோடு தூய்மையின் அவசியம் குறித்தும் போலீஸாரிடம் பேசினார்.

மகாத்மா காந்தியின் பிறந்த தினமான அக்.2ம் நாளான இன்று, அவரின் கனவுத் திட்டமான "ஸ்வச்ச பாரத்- தூய்மை இந்தியா" திட்டத்தை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். இந்தத் திட்டத்தை தொடங்கி வைப்பதில் தாம் மிகவும் பெருமைப்படுவதாக அவர் கூறினார்.

தில்லி இந்தியா கேட் பகுதியில், "தூய்மை இந்தியா" திட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றிய பிரதமர் மோடி, "மகாத்மா காந்தியின் கனவு திட்டமான ஸ்வச்ச பாரத் திட்டத்தை அவரது பிறந்த நாளான இன்று துவக்கி வைப்பதில் பெருமை கொள்கிறேன். இந்தத் திட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் எனது நன்றி. உலக நகரங்களை ஒப்பிடும்போது, இந்திய நகரங்கள் தூய்மையாக இல்லை என்பதை நம் அறிவோம். ஸ்வச்ச பாரத் திட்டம் குறித்த காந்தியின் கனவு இன்னும் முழுமை பெறவில்லை. வரும் 2019க்குள் முழுமையான தூய்மை இந்தியா என்ற இலக்கை அடைவோம். விரைவில் காந்திஜியின் ஸ்வச்ச பாரத் கனவு நிறைவேற அவரது 150வது ஜெயந்தி தினமான இன்று உறுதி ஏற்போம்" என்று கூறி உறுதி மொழி ஒன்றையும் வாசித்தார்.

இதை அடுத்து, மத்திய அரசு அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் அலுவலகங்களுக்கு வந்து தூய்மைப் படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர். ரயில்வே நிலையங்களில் இந்தத் திட்டம் முழு வீச்சில் அமல்படுத்தப் பட்டது. வாரம் 2 மணி  நேரம் என வருடத்துக்கு 100 மணி நேரம் இந்தத் தூய்மைப் பணியில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

No comments:

Post a Comment