Monday, October 20, 2014

தேசத்தின் மகுடம் கண்காட்சி நடத்தப்படும் பட்சத்தில் யாழ்.மாவட்டம் உள்ளிட்ட வடமாகாணம் பாரியளவிலான அபிவிருத்தியில் முன்னேற்றம் காணும்: டக்ளஸ் தேவானந்தா!

Monday, October 20, 2014
இலங்கை::கிடைக்கப் பெறுகின்ற பயனுள்ள திட்டங்களை மக்கள் உரிய முறையில் பயன்படுத்த வேண்டுமென்பதுடன் அதனை அர்த்தபூர்வமானதாக்கும் வகையில் முன்னெடுக்க வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

பண்டத்தரிப்பு இந்துக்கல்லூரியில் வாழ்வின் எழுச்சி தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் யாழ்.மாவட்டத்திற்கான நிகழ்வை இன்றைய தினம் (20) சுபநேரத்தில் ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அரசினால் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் இத் திட்டமானது வரவேற்கத்தக்கது.
இருந்தபோதிலும், கடந்தகால அரசுகள் தமிழ் மக்களை மாற்றாந்தாய் நோக்கோடு பார்த்தபடியினால் தான் அன்றைய காலப்பகுதியில் நாம் ஆயுதம் தூங்க வேண்டிய துர்ப்பாக்கியம் ஏற்பட்டது.

அதன்பின்னர், தவறான தமிழ் அரசியல் தலைமைகளினால்தான் எமது மக்கள் அளவிட முடியாத அழிவுகளையும் துன்பங்களையும் சந்தித்திருந்தனர்.

நிறைவான இல்லம் வளமானதேசம் என்ற திட்டத்திற்கு அமைவாக அரசு பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

இன்றைய நாளில் வாழ்வின் எழுச்சி திட்டத்திற்கு அமைவாக பயன்தரு மரக்கன்றுகள், விதை தானியங்கள் அடங்கிய பொதிகள், கோழிக்குஞ்சுகள் என பலவிதமான வாழ்வாதாரத்திற்கான உள்ளீடுகள் பயனாளிகளுக்கு வழங்கப்படுகின்றன.

இவ்வாறு கிடைக்கப் பெறுகின்ற வாழ்வாதாரத்திற்கான உள்ளீடுகளை மக்கள் உரிய முறையில் பயன்படுத்தி அதனூடாக உயர்ந்த பயன்களையும் பெற்றுக் கொள்ள வேண்டும்.

அத்துடன், இவ்வாறு கிடைக்கப் பெறுகின்ற நல்ல பலன்களை ஆதரித்து அவற்றை அர்த்தபூர்வமானதாக்கும் வகையில் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

2016 ஆம் ஆண்டு வடமாகாணத்தில் தேசத்தின் மகுடம் கண்காட்சியை நடாத்த வேண்டுமென நான் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளேன்.

அவ்வாறு தேசத்தின் மகுடம் கண்காட்சி நடத்தப்படும் பட்சத்தில் யாழ்.மாவட்டம் உள்ளிட்ட வடமாகாணம் பாரியளவிலான அபிவிருத்தியில் முன்னேற்றம் காணுமென்றும் சுட்டிக்காட்டியதுடன் கிடைக்கப் பெறுகின்ற சந்தர்ப்பங்களை மக்கள் சரியான முறையில் பயன்படுத்தி அதனூடாக சிறந்தபயன்களைப் பெற்றுக் கொள்வதற்கு எல்லோரும் ஒன்றிணைந்த ஒத்துழைப்பையும் ஒத்தாசையையும் வழங்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.

யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் நடைபெற்ற நிழ்வில் வாழ்வின் எழுச்சித் திட்டம் தொடர்பிலான விளக்கவுரையினை வடக்கு மாகண சபை எதிர்க்கட்சித் தலைவர் தவராசா நிகழ்த்தினார்.

தொடர்ந்து வாழ்வின் எழுச்சித் திட்டப் பயனாளிகளுக்கு பழ மரக்கன்றுகள், விதை பொதிகள், கோழிக் குஞ்சுகள் உள்ளிட்ட வாழ்வாதாரத்திற்கான உள்ளீடுகள் வழங்கப்பட்டன.

பண்;டத்தரிப்பு இந்துக்கல்லூரி வளாகத்தில் மாவட்டத்திற்கான வாழ்வின் எழுச்சி தேசிய நிகழ்ச்சித் திட்டத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மரக்கன்றை நாட்டி வைத்து உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

மதகுருமார்களின் ஆசியுரைகளுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் அமைச்சர் அவர்களுடன் ஏனைய அதிதிகளும் வளாகத்தில் மரக்கன்றுகளை நாட்டி வைத்தனர்.

நாடெங்கிலும் 25 இலட்சம் மனைப் பொருளாதார அலகுகளை வலுவூட்டும் தேசிய நிகழ்ச்சி திட்டத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் ஆரம்பித்து வைத்த சமநேரத்தில் மாவட்டங்களின் அந்தந்த அமைச்சர்களாலும் ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களாலும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற இன்றைய நிகழ்வில் யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ரூபினி வரதலிங்கம், வடமாகாண ஆளுநரின் செயலாளர் இளங்கோவன், சண்டிலிப்பாய் பிரதேச செயலர் முரளிதரன், வாழ்வின் எழுச்சி திணைக்கள உதவி ஆணையாளர் மகேஸ்வரன், யாழ்.மாவட்ட வாழ்வின் எழுச்சி திட்ட இணைப்பாளர் ரகுநாதன், அமைச்சரின் ஆலோசகர் சுந்தரம் டிவகலால, அமைச்சரின் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குகேந்திரன், ஈ.பி.டி.பியின் மானிப்பாய் பிரதேச இணைப்பாளர் அன்ரன்ஜோன்சன் (ஜீவா) விவசாயத் திணைக்கள மாவட்ட உதவிப் பணிப்பாளர் சிறிபாலசுந்தரம் உள்ளிட்ட திணைக்களங்களில் அதிகாரிகள் எனப் பல்துறைசார்ந்த பலரும் உடனிருந்தனர். 

இதனிடையே யாழ்.பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட அத்தியடிப் பகுதியில் பயனாளி ஒருவரின் வீட்டுத்தோட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மரக்கறி செடிகளை நாட்டி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது யாழ்.பிரதேச செயலர் சுகுணரதி தெய்வேந்திரம் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

No comments:

Post a Comment