Tuesday, October 7, 2014

ஜெயலலிதா ஜாமீன் மனு மீது இன்று மீண்டும் விசாரணை!

Tuesday, October 07, 2014
பெங்களூர்::அதிமுக பொதுச் செயலாளரும், மக்களின் முதல்வருமான ஜெயலலிதா தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று கர்நாடக ஐகோர்ட்டில் நடைபெறுகிறது. பெரும்பாலும் அவருக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்புள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீதான வழக்கில் கர்நாடக சிறப்பு நீதிமன்றம் கடந்த 27ம் தேதி தனது தீர்ப்பை வழங்கியது. தனி நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா இந்த தீர்ப்பினை அளித்தார். இதையடுத்து ஜெயலலிதா, சசிகலா, இளவரசி உள்ளிட்ட நால்வர் கர்நாடக மாநிலத்தில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். அவர் சிறையில் அடைக்கப்பட்டு கிட்டத்தட்ட 9 நாட்களாகி விட்டன. ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்ட நாள் முதல் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு அறவழி போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
 
உண்ணாவிரதம், மெகா மனித சங்கிலி போராட்டங்கள், ஆலயங்களில் கூட்டு வழிபாடு, பால்குடம் எடுத்தல் என அனைத்து விதமான அறவழி போராட்டங்களை கட்சியினரும், பொதுமக்களும் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்தும், அதை ரத்து செய்ய கோரியும், அவருக்கு ஜாமீன் வழங்க கோரியும் கடந்த 29ம் தேதி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை கர்நாடக ஐகோர்ட் தலைமை நீதிபதி வகேலா அனுமதியின் பேரில் ஏற்றுக் கொண்ட கர்நாடக உயர்நீதிமன்ற பதிவாளர் தேசாய் அதை விடுமுறை கால நீதிமன்றத்தில் விசாரணைக்கு பட்டியலிட்டார். இதையடுத்து அடுத்த நாள் இந்த மனுக்கள் விடுமுறை கால நீதிபதி ரத்தினகலா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதா சார்பில் பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி ஆஜராகி அவரை ஜாமீனில் விடுதலை செய்ய கோரும் மனுவை நீதிபதியிடம் கொடுத்தார்.
 
மேலும் குற்றவியல் நடைமுறை சட்டப்படி அரசு வக்கீலின் ஒப்புதல் இல்லாமலேயே ஜாமீன் வழங்கும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு உள்ளது என்று அவர் வாதிட்டார். ஆனால் இது மிகவும் முக்கியமான வழக்கு என்பதால் அதை வழக்கமான அமர்வுதான் விசாரிக்க வேண்டும் என்று கூறி விசாரணையை 7ம் தேதிக்கு ஒத்திவைத்தார் நீதிபதி. இதனால் தமிழக மக்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர். கட்சியினரும் சோகத்தில் ஆழ்ந்தனர். இந்த நிலையில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தசரா விடுமுறை காலம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. எனவே ஜெயலலிதா உள்ளிட்டோர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெறவுள்ளது.
 
ஜெயலலிதா சார்பில் வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி மீண்டும் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயலலிதாவின் ஜாமீன் மனு நீதிபதி சந்திரசேகர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வருகிறது. இன்று அவருக்கு பெரும்பாலும் ஜாமீன் கிடைத்து விடும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு வாய்ப்பு இருப்பதாக ஜெயலலிதாவுக்கு எதிராக வாதிட்ட அரசு வழக்கறிஞர் ஆச்சார்யாவே கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment