Monday, October 6, 2014

அத்துமீறல் உச்ச கட்டத்தை எட்டியது பாக். ராணுவம் துப்பாக்கி சூடு: பெண்கள் உள்பட 5 பேர் பலி: எல்லையில் போர் பதற்றம் அதிகரிப்பு!

ஸ்ரீநகர்: காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினரின் அத்துமீறிய தாக்குதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடத்திய துப்பாக்கி சூட்டில் எல்லையோர கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் உள்பட 5 பேர் பலியாயினர். இதனால் அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது.பாகிஸ்தானில் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக அங்கு எதிர்கட்சிகள் போராட்டதில் ஈடுபட்டு வருகின்றன. அவர் தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. நாடாளுமன்ற வளாகத்தை முற்றுகையிட்டு மதகுரு காத்ரி, கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் ஆகியோர் தொடர் போராட்டங்களை நடத்தினர். இதனால் பாகிஸ்தான் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறல் சம்பவங்களை தொடங்கினர்.  கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 100க்கும் அதிகமான அத்துமீறல் சம்பவங்களை நடத்தியது.

பின்னர் இரு தரப்பு பேச்சு வார்த்தைக்கு முயற்சி மேற்கொள்ளப்பட்ட போது, பாகிஸ்தான் தூதர் காஷ்மீரில் உள்ள பிரிவினைவாத தலைவர்களை சந்தித்து பேசினார். இதற்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்தது. பாகிஸ்தான் உடனான பேச்சு வார்த்தையை ரத்து செய்தது. பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தின் போதும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை சந்திக்கவில்லை.இந்நிலையில் கடந்த சில நாட்களாக எல்லையில் பாகிஸ்தானின் தாக்குதல் மேலும் அதிகரித்துள்ளது. இந்திய ராணுவ நிலைகள் மீது நடத்தி வந்த தாக்குதலை தொடர்ந்து தற்போது கிராமப்புறங்களிலும் தனது தாக்குதலை அதிகரித்துள்ளது. துப்பாக்கியால் சுடுவது, கையெறி குண்டுகளை வீசுவது போன்ற உச்ச பட்ச தாக்குதலில் பாகிஸ்தான் இறங்கியுள்ளது. இதையடுத்து, 25 கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள், பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டனர்.

காஷ்மீரின் பூஞ்ச் மற்றும் ஜம்மு பகுதி எல்லையோர கிராமங்களில் கடந்த 4 நாட்களில் 10 முறை பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டும், குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் கிராம மக்கள் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். ஏராளமான வீடுகள் இடிந்துள்ளன. நேற்று முன்தினம் பூஞ்ச் பகுதியில் நடத்திய தாக்குதலில் கிராம வாசிகள் 3 பேர் காயமடைந்தனர். கடந்த வெள்ளிக் கிழமை இரவு எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி வந்து பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். அதே போல் ஆர்எஸ் புரா பகுதியிலும் அத்துமீறல்கள் நடந்துள்ளன. எல்லையோரத்தில் உள்ள சன்னா, கோத்வால், தேவிகார் உள்ளிட்ட கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல வீடுகள் இடிந்துள்ளன. பல கால்நடைகள் குண்டு பாய்ந்து இறந்துள்ளன. தாக்குதலால் அச்சமடைந்துள்ள கிராம மக்கள் டிராக்டர்கள் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் ஊரைவிட்டு வெளியேறி வருகின்றனர்.

ராணுவ பதுங்கு குழிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். எல்லையில் பாகிஸ் தான் அத்துமீறலுக்கு மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், பாகிஸ்தானின் தொடர் தாக்குதலை இந்தியா வன்மையாக கண்டிக்கிறது. உள்நாட்டு பிரச்னைகளால் பாகிஸ்தான் விரக்தி அடைந்துள்ளது. தேவையான பதிலடியை இந்திய ராணுவத்தினர் கொடுக்கலாம் என்றார். இந்நிலையில் ஜம்மு பிராந்தியத்தில் உள்ள ஆர் எஸ் புரா பகுதியில் அமைந்துள்ள அர்னியாவில் நேற்று நள்ளிரவு சுமார் 1.30 மணி அளவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ச்சியாக துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர்.

இதில் 2 பெண்கள் உள்பட 5 பேர் கொல்லப்பட்டனர். 25க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் ஜம்முவில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கிராம மக்கள் பெரும் பீதி அடைந்துள்ளனர்.சமீபத்தில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் மிகவும் மோசமான தாக்குதல் சம்பவம் இதுவாகும் என்று எல்லை பாதுகாப்பு படை அதிகாரி தெரிவித்துள்ளார். எல்லையில் தொடர்ந்து போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment